ஊருக்கு எம்.பி கோஷமும்: தோற்றுவிக்கப்படும் பிரதேசவாதமும் - News View

Breaking

Post Top Ad

Sunday, March 15, 2020

ஊருக்கு எம்.பி கோஷமும்: தோற்றுவிக்கப்படும் பிரதேசவாதமும்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் - ஓட்டமாவடி

தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு நாடு பொதுத்தேர்தலுக்குத்தயாராகி வரும் நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் வெற்றி பெறும் சுலோகங்களை உச்சரிக்கத் தயாராகிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தளவில் ஒவ்வொரு பொதுத்தேர்தல்கள் வரும் போதும், சிலர் தங்களது அரசியல் உத்தியாக ஊருக்கு எம்.பி என்ற கோசத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இம்முறையும் அதே கோசத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் நகர்வுகளை முஸ்லிம் பிரதேசங்களில் முன்னெடுத்து வருவதை அவதானிக்கலாம்.

இவ்வாறான கோசங்கள் தங்களது சுயநலத்திற்காக உருவாக்கப்பட்டாலும், எதிர்காலத்தில் மட்டு. மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பிரதேசவாதமும் குரோதங்களும் உருவாகும் ஆபத்தான சூழ்நிலை உருவாவதோடு, இளைய தலைமுறையினர் மத்தியில் விதிக்கப்படும் இவ்வாறான நச்சுக்கருத்துக்களால் எதிர்கால முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை கேள்விக்குறியாகி விடும்.

சமகாலத்தில் முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் இனவாத அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கும் சந்தர்ப்பத்தில், முஸ்லிம்களின் ஒற்றுமையை வலுப்படுத்தி தமக்கான சவால்களை வெற்றி கொள்வதை விடுத்து, தங்களின் சுயநல அரசியலுக்காக தேர்தலில் வெற்றி பெற பிரதேசவாதத்தினை விதைப்பது பெரும் ஆபத்தானது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள அரசியல்வாதிகளின் மத்தியில் ஊருக்கு எம்.பி என்ற ஒரு குறுகிய சிந்தனையில் ஒரு சிலரே செயற்படுகிறார்கள். அவ்வாறானவர்கள் தங்களின் பிரதேசங்களை விட்டு வெளியூருக்குச்சென்று மேடைகளில் வாக்கு கேட்கும் போது, தான் குறித்த பிரதேச மக்களுக்குத்தான் எம் பி என்று கேட்க முடியுமா? அதை விடுத்து, தான் குறித்த பிரதேசத்திற்குத்தான் (ஊருக்கு) எம் பி என்ற அடிப்படையில் அவர்கள் வெளியூருக்குச்சென்று வாக்கு கேட்பதைத்தவிர்ந்து கொள்வார்களா? யாரை ஏமாற்ற இந்த நாடகம்?

கடந்த ஜனாதிபதித்தேர்தல் வெற்றிக்காக முஸ்லிம் சமூகத்தின் மீது இனவாதக்கருத்துக்களை பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து, தற்போதைய ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்த முடிந்தது. முஸ்லிம்கள் தொடர்பான இனவாத சிந்தனை இன்றும் சிங்கள மக்கள் மத்தியில் பிரதிபலிப்பதை நாம் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் நிலையில், இவ்வாறு அற்ப தேர்தல் வெற்றிக்காக முஸ்லிம் பிரதேசங்களுக்கு மத்தியில் பிரதேசவாதத்தினை விதைப்பதால் தேர்தலில் வெற்றி பெறலாம்.

ஆனால், எதிர்காலத்தில் பிரதேசவாதம் கொழுந்து விட்டெரியும். இளைஞர்களின் மனதிலும் பிரதேசவாதம் விதைக்கப்படுவதனால் எதிர்காலத்தில் ஏற்படும் விபரீதங்களை ஏன் நாம் உணர்ந்து கொள்வதில்லை. இன்று ஒவ்வொரு ஊரிலும் ஊருக்கு எம்.பி என்ற கோசம் இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரப்பப்பட்டு,அதன் விளைவாக சமூக வலைதளங்களில் ஒருவர் மற்றைய ஊரை விமர்சிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இது ஊர் ரீதியாக ஒருவருக்கொருவரிடையே குரோத மனப்பான்மையை ஏற்படுத்தும். இது ஆரோக்கியமான விடயமல்ல.

தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தளவில் ஐந்து ஆசனங்களில் போனஸ் உட்பட மூன்று ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெறக்கூடிய நிலையில், நான்காவது ஆசனம் பொதுஜன பெரமுன கூட்டணி பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தளவில் இம்முறை பெரும்பான்மை கட்சிகளூடாக பெற்றுக்கொள்ளும் சாத்தியம் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக மூன்று தமிழர்கள் தெரிவு செய்யப்பட, நான்காவது ஆசனம் பொதுஜன பெரமுன தனித்து மொட்டு சின்னத்திலோ அல்லது சுதந்திர்கட்சி கூட்டு சேர்ந்து கேட்கும் போது மக்கள் ஆதரவு இருக்கும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு போட்டியிடும் வாய்ப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு தமிழர் ஒருவர் தெரிவாகும் வாய்ப்பிருக்கிறது. எனவே, ஐந்தாவது ஆசனத்தை முஸ்லிம் ஒருவர் வெற்றி கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியூடாக முஸ்லிம் பிரதிநிதியைப்பெற முடியுமா? என்று நோக்குமிடத்து, கடந்த பாராளுமன்றத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி ஆளுந்தரப்பாக இருந்த சந்தர்ப்பத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது ஆசனத்தை சொற்பளவான வாக்குகளால் தான் தக்க வைக்க முடிந்தது. அதில் பிரதான பங்காளராக இருந்தவர் பட்டிருப்புத்தொகுதியைச்சேர்ந்த முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தி.

தற்போது கணேசமூர்த்தி தனக்கான ஒரு கட்சியை உருவாக்கி மேலும் மூன்று தமிழ்க்கட்சிகளுடன் கூட்டிணைந்து உயத சூரியன் சின்னத்தில் போட்டியிடவிருப்பதாக அறிய முடிகிறது. இவ்வாறான சூழ்நிலையில்,தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில்,சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அணி, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி அணி என ஐக்கிய தேசிய கட்சி இரண்டாகப்பிரிந்து தேர்தலை எதிர்நோக்கவிருப்பதாக அறிய முடிகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் கணேசமூர்த்தியும் அவர்களுடன் இணைந்து போட்டியிடாதவிடத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி அல்லது சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அணி ஆசனம் பெற முடியாத நிலையேற்படும். இவற்றையெல்லாம் அறிந்திருந்தும், ஊருக்கு எம் பி என்ற கோசத்தை எழுப்பி சிலர் மக்களை மடையர்களாக்க முயற்சிக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் பல கூறுகளாகப்பிரிந்து தேர்தல் கேட்பதும்,வாக்களிப்பதும் முஸ்லிம் பிரதிநிதியைப் பெறும் வாய்ப்புகளைக் குறைத்து விடலாமென்ற ஆபத்தை உணர்ந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும். சரியான முறையில் காய்கள் நகர்த்தப்பட்டால், இரு முஸ்லிம் பிரதிநிதிகளை நாம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகளும் இருக்கிறது.

இன்று முஸ்லிம் சமூகம் பல்வேறு சோதனைகளுக்குட்பட்டிருக்கும் வேளையில், தேர்தலின் பின்னர் மேலும் என்ன பிரச்சனைகள் சமூகத்தை நோக்கி வரப்போகிறது? முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதிகளும் வெற்றி பெற்றால், எவ்வாறான நிலைமை ஏற்படுமென்று பொதுவாகச்சிந்தித்து, சமூக ஒற்றுமையை பலமாக ஏற்படுத்த வேண்டிய தருணத்தில், சுயநலனுக்காக இவ்வாறான அரசியல்வாதிகள் ஊர்வாதத்தை ஏற்படுத்தி தேர்தல் செய்ய முற்படுவதை உலமாக்கள், அறிஞர்கள், புத்திஜீவிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது உசிதமானதல்ல.

எனவே, தேர்தலில் போட்டியிடுபவர்கள் சமூக ஒற்றுமையைக்குழப்பும் வாசகங்களைப் பயன்படுத்துவதையோ, பிரதேசவாதத்தினை ஏற்படுத்துவதனையோ உலமாக்கள், புத்திஜீவிகள் கட்டுப்படுத்த வேண்டுமென்பதுடன், எதிர்காலத்தில் ஏற்படும் இவ்வாறான விபரீதங்களைக் கருத்திற்கொண்டு அரசியல்வாதிகளையும், மக்களையும் தெளிவுபடுத்தும் பணிகளைச்செய்ய முன்வர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad