தேசிய ஐக்கிய முன்னணியில் முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபடும் காலம் காலடியில் வந்துள்ளது, ரணில், சஜித்தை காப்பாற்ற சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை - அஸாத் சாலி தெரிவிப்பு!!! - News View

About Us

About Us

Breaking

Sunday, March 8, 2020

தேசிய ஐக்கிய முன்னணியில் முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபடும் காலம் காலடியில் வந்துள்ளது, ரணில், சஜித்தை காப்பாற்ற சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை - அஸாத் சாலி தெரிவிப்பு!!!

ஊடகப்பிரிவு 

பெரும்பான்மைவாதிகளின் பொருட்படுத்தாத போக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவுச் சூழல்களுக்கு மத்தியில், முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து, பொது அணியில் போட்டியிட முன்வர வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஸாத்சாலி தெரிவித்தார்.

கொழும்பில், நேற்று முன்தினம் (07) ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், சமகால அரசியல் பற்றி தௌிவுபடுத்தியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு கருத்து தெரிவித்த அசாத்சாலி, “நாட்டின் புதிய அரசியல் கலாசாரச் சூழலில் பிரதான தேசிய கட்சிகளுடன் (ஐக்கிய தேசிய கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன) இணைந்து, முஸ்லிம் கட்சிகள் போட்டியிடுவது பலனளிக்காது. சமூகத்தின் பிரதிநிதித்துவங்களையும் ஏனைய சமூகங்களின் பிரதிநிதிகளையும் வென்றெடுப்பதற்கான புதிய வியூகங்கள்தான், சிறுபான்மைச் சமூகங்களைப் பாதுகாக்கும். 

குறிப்பாக, ஒரு இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் வாக்குகள் உள்ள மாவட்டங்களில், முஸ்லிம்களை முதன்மைப்படுத்தியும் ஏனைய மாவட்டங்களில், சகோதர சமூகங்களை பிரதானப்படுத்தியும் வேட்பாளர்களை நிறுத்துவதே சிறந்த சாணக்கியமாக அமையும். இது குறித்து முஸ்லிம் தலைமைகள் சிந்திக்க வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட்டுள்ள இன்றைய சூழலில், ரணிலைக் காப்பற்றவோ அல்லது சஜித்தை காப்பாற்றுவது பற்றியோ சிந்திக்க வேண்டிய அவசியம் முஸ்லிம் தலைமைகளுக்கு இல்லை. இதேபோன்று, அதிகாரத்திலுள்ளவர்களின் மனநிலைகள் பற்றியும் நாம் சிந்திப்பதே சிறந்த ராஜதந்திரமாகவுள்ளது. 

இங்குள்ள சிலரின் கண்டுகொள்ளாத போக்குகளும், சிறுபான்மைத் தலைவர்களை தனித்துப் போட்டியிடுமாறு கூறப்படும் ஆலோசனைகளும், இணக்கப்பாட்டு அரசியலைத் தனிமைப்படுத்தியுள்ளன. 

இந்நிலையில் தனித்துப் போட்டியிட்டு, சமூகப்பலங்களைப் பேரம்பேசும் சக்தியாக மாற்றுவதுதான் முஸ்லிம் தலைமைகளுக்கு உள்ள ஒரேவழியாகும். இவற்றைப் புரிந்துகொண்டு அவசரமாக முஸ்லிம் கட்சிகள், தேசிய ஐக்கிய முன்னணியிலோ அல்லது எந்த அணியிலோ ஒன்றுபட வேண்டியுள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் சிந்தனைகளுக்கு உயிரூட்ட முன்வருவது காலத்தின் தேவையாகும். 

இவற்றைச் செய்யத் தவறின், சகல மாவட்டங்களிலும் தேசிய ஐக்கிய முன்னனி தனித்துக் களமிறங்கும். வெற்றிக்காக இல்லாவிடினும், எதிர்கால இலட்சியங்களுக்கான அடித்தளமாக இப்பொதுத் தேர்தலை தேசிய ஐக்கிய முன்னணி பயன்படுத்தும்” என்றும் அசாத்சாலி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment