அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்ட பயணிகள் கப்பலில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை கடந்த நாள்களை ஒப்பிடும்போது குறைந்திருந்தாலும், உலகின் பிற நாடுகளில் அதிகரித்துள்ளது. தற்போதுவரை கொரோனா வைரஸ் சுமார் 90 நாடுகளில் பரவியுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்ட பயணிகள் கப்பலில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்தார்.
முதற்கட்டமாக 46 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அதில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் கப்பலில் 3,500 பயணிகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் பரிசோதனை முடிவுகள் வரும்போது இந்த எண்ணிக்கை என்னவாக இருக்கும் என பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யும் மருத்துவ உபகரணங்கள் ஹெலிகாப்டர் மூலம் கப்பலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உறுதி செய்யப்பட்ட 21 பேரில் 19 பேர் கப்பலில் பணியாற்றுபவர்கள் என்றும் 2 பேர் பயணிகள் என்றும் கூறப்படுகிறது. கப்பலில் இருக்கும் அனைவருக்கும் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் கப்பலில் தங்க வைக்கப்படுவார்களா அல்லது அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படுவார்களா என்பது தொடர்பாக இன்னும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் அறிவிக்கப்படவில்லை.
எனினும் சான் ஃபிரான்ஸிஸ்கோவில் உள்ள வணிகம் நடைபெறாத துறைமுகத்துக்கு கப்பல் கொண்டு வரப்படும் என்றும் அங்கு பரிசோதனைகள் நடைபெற்று, தேவைப்பட்டால் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என்று துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்தார்.
எனினும் அமெரிக்க ஜனாதிபதி இந்த யோசனைக்கு ஒப்புதல் தரமாட்டார் என்று கூறப்படுகிறது. கொரோனா சிறப்பு முகாம்களில் ஆய்வு செய்த ட்ரம்ப், பயணிகள் கப்பல் தொடர்பாக பேசினார்.
அப்போது அவர், ``கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மிக முக்கியம். ஒரு கப்பல் மூலம் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க நாங்கள் விரும்பவில்லை" என தெரிவித்தார்.
எனினும் அதிகாரிகள் பலரும், அனைவரையும் கப்பலில் வைத்திருக்கும் முடிவு மோசமானது என தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் முடிவுதான் அனைவருக்கும் நல்லதாக முடியும் என கூறுகிறார்கள்.
அமெரிக்கா இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
No comments:
Post a Comment