“பொய்யான பரப்புரைகளை நம்ப வேண்டாம்” - அஷாத் சாலி வேண்டுகோள்! - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 25, 2020

“பொய்யான பரப்புரைகளை நம்ப வேண்டாம்” - அஷாத் சாலி வேண்டுகோள்!ஊடகப்பிரிவு 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், நேற்று (24) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தேர்தல், ஊரடங்கு தொடர்பிலான காலவரையறை மற்றும் மக்களை தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைப்பது குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக, இணையத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனவும், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்கள் சிலரிடம் தாம் கேட்டபோது, அவ்வாறான எந்தத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் மறுத்ததாகவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

மக்கள் மிகவும் துன்பத்திலும் வறுமையிலும் நெருக்கடியான காலகட்டத்திலும் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் போது, இவ்வாறான செய்திகளை பரப்பி அவர்களின் மன உளைச்சல்களை, மேலும் அதிகரிக்க வேண்டாமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றதாகக் கூறுவதிலிருந்தே இவ்வாறான இணையத்தளங்கள் பச்சைப் பொய்யைப் பரப்புவது அப்பட்டமாக வெளிப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் எந்தவிதமான உத்தியோகபூர்வ அறிவிப்புக்களைத் தவிர, வதந்திகளையும் இவ்வாறு பரப்பப்படும் அடிப்படையற்ற செய்திகளையும் நம்ப வேண்டாம் எனவும் மக்களை அவர் கேட்டுள்ளார்.

அத்துடன், சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களைப் பேணி நடக்குமாறும் ஊரடங்கு உத்தரவுகளை முறைப்படி பின்பற்றி நடக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ள அவர், இக்கட்டான காலகட்டத்தில் இவ்வாறான செய்திகளை பரப்பும் வலையமைப்புக்கள், இணையத்தளங்கள் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad