விமான சேவை ஊழியர்களையோ, குடும்பத்தினரையோ புறக்கணிக்கும் வகையில், வருத்தும் விதமாக செயற்பட வேண்டாம் - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 24, 2020

விமான சேவை ஊழியர்களையோ, குடும்பத்தினரையோ புறக்கணிக்கும் வகையில், வருத்தும் விதமாக செயற்பட வேண்டாம் - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

(நா.தனுஜா) 

நாட்டின் நலனை முன்நிறுத்தி, தேசிய ரீதியான இலக்கொன்றுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்களையோ அல்லது அவர்களது குடும்பத்தினரையோ புறக்கணிக்கும் வகையில் அல்லது வருத்தும் விதமாக செயற்பட வேண்டாம் என்று அந்த விமான சேவைகள் நிறுவனம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது. 

இது குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலினால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவையின் ஊழியர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அண்மைக் காலங்களில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 

அது மாத்திரன்றி எயார்லைன்ஸ் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது ஹோட்டல்கள், பாடசாலை, வைத்தியசாலை போன்ற பொது இடங்களில் காட்டப்படுகின்ற வெறுப்பும், அச்சமும் மிகுந்த கவலையளிக்கிறது. 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் என்பது இலங்கையின் தேசிய விமான சேவை என்பதுடன், அத்தியாவசிய சேவையாகவும் பெயரிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக மிகப்பாரிய சுகாதார அச்சுறுத்தல் காணப்படுவதுடன், தனிப்பட்ட பாதுகாப்பும் ஆபத்திலுள்ள போதிலும் இது நாட்டு மக்களுக்கு அத்தியாவசியமான சேவையாகத் தொடர்கிறது. 

கொவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று உலகையே பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கும் நிலையிலும் கூட, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையும், அதன் ஊழியர்களும் அனைத்துப் பயணிகள், கார்கோ நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய விமான சேவைகளை தினமும் 24 மணி நேரமும் வழங்கிக் கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் தற்போது பணியிலிருக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் ஊழியர்கள் அனைவரும் நெருக்கடி மிக்க சூழ்நிலைகளில் பணியாற்றுவதற்கான பயிற்சியிலும் ஈடுபடுத்தப்படுவதுடன், சுய பாதுகாப்பு தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்கள் மற்றும் விமான சேவை ஊழியர்களுக்கான சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் அறிவுறுத்தல்களையும் சீராகப் பின்பற்றுகின்றார்கள். 

மேலும் அவர்களது உடல் மற்றும் உளநிலை குறித்து சீரான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அவர்களது குடும்பத்தாரின் பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகிறது. 

எனவே தற்போது நாட்டின் நலனை முன்நிறுத்தி, தேசிய ரீதியான இலக்கொன்றுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்களையோ அல்லது அவர்களது குடும்பத்தினரையோ புறக்கணிக்கும் வகையில் அல்லது வருத்தும் விதமாக செயற்பட வேண்டாம் என்று அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment