வடக்கும் கிழக்கும் ஒருமித்து செயற்படக் கூடியதாக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளோம் - விக்னேஸ்வரனுடன் இணைந்தார் முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

வடக்கும் கிழக்கும் ஒருமித்து செயற்படக் கூடியதாக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளோம் - விக்னேஸ்வரனுடன் இணைந்தார் முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி

வடக்கும் கிழக்கும் சேர்ந்த ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளோம். அதைப் பலமாக்குவதற்கும் வரும் காலத்தில் வடக்கும் கிழக்கும் கொள்கை ரீதியாக ஒருமித்து செயற்படக் கூடியதாக புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளோம். இன்று தொடக்கம் பலமானதொரு கட்சியாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி செயற்படும் என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாமாங்கத்தில் அமைந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் காரியாலயத்தில் நேற்று (12) முன்னாள் பிரதி அமைச்சர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கட்சியில் இணைந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சி.வி. விகினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கடந்த சில மாதங்களுக்கு முன் 4 கட்சிகள் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது. அப்போது கிழக்கு மாகாணத்தில் ஒரு கட்சி சேரவில்லையே என ஆதங்கத்தோடு இருந்தோம். அந்த ஆதங்கத்தை தீர்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இலங்கை தமிழர்கள் முற்போக்கு கூட்டணி எங்களுடன் சேர்ந்துள்ளது.

அதனடிப்படையிலே சேர்ந்து எங்கள் நடவடிக்கையில் ஈடுபட முடியும் என்ற பலமான நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது இன்று தொடக்கம் பலமானதொரு கட்சியாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி செயற்படும்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் நூற்றுக்கு 17 சதவீதம் என்பதால் நாங்கள் தமிழ் கட்சிகளுடன் சோர்ந்து போட்டியிடுவதால் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவமான ஒன்றும் இல்லாமல் போய்விடும் ஆகவே தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய யாராவது ஒருவரை ஆதரவு கொடுக்க யோசித்திருக்கின்றோம்.

திருகோணமலையில் போட்டியிடுவது பற்றி இன்னமும் முடிவு எடுக்கவில்லை ஆகவே நாங்கள் சிலரை அடையாளப்படுத்தியுள்ளோம். அவர்களுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய கொடுப்பதா இல்லையா என்பது அடுத்துவரும் நாட்களில் தெரியும்.

மட்டக்களப்பை பொறுத்தமட்டில் நாங்கள் அதிதீவிரமாக போட்டியிடுவோம் எங்களுக்கு போதியளவு பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது

அதேவேளை எமது கட்சியின் இணை செயலாளர் சீ. சோமசுந்தரத்தை பிரதம வேட்பாளராக நியமித்திருக்கின்றோம். பிரதம வேட்பாளர் ஒரு அரசியல் ரீதியாக உத்தியோகபூர்வமாக இல்லாவிடினும் மக்கள் ரீதியாக நன்மைகள் பெறலாம் என சோ.கணேசமூர்த்தி நினைக்கின்றார் அவ்வாறான தர்னத்திலே இணை வேட்பாளராக தம்மை காட்டிக் கொள்ள முடியும். ஆனால் சோமசுந்தரம் பிரதம வேட்பாளராக செயற்படுவார்.

தமிழ் தேசிய கொள்கைக்காக கட்சி உருவாக்கப்பட்டது ஆகவே அந்த கொள்கைகளுக்கு எதிரான விதத்திலே கடந்த காலங்களில் நடந்து கொண்ட சிலர் இருக்கும் கட்சிகளுக்கும் எங்களுக்கும் எந்த விதமான தொடர்புகளை ஏற்படுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம்.

ஆனால் தமிழ் மக்கள் என்ற முறையிலே நாங்கள் பாராளுமன்றம் சென்ற பின்னர் அங்கு வரும் நபர்களுடன் நாங்கள் சேர்ந்து சில நேரத்தில் தமிழ் மக்கள் சார்பிலே நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்படும் போது நாங்கள் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களுடைய நன்மை கருதி நடவடிக்கைகளை எடுக்க முடியுமே தவிர தேர்தல் தொடர்பாக இந்த கட்சிகளுடன் எங்களுக்கு தொடர்பில்லை.

வன்முறைகளுடன் சம்மந்தப்பட்டவர்கள் சிலர் அந்த கூட்டணியுடன் முக்கியத்துவம் வகிக்கின்றார்கள், அதேவேளை எந்த அரசாங்கத்துடனும் சேர்ந்து அமைச்சு பதவிகளை அவர்கள் பெற்றுக் கொண்டால் எங்கள் மக்களுக்கு அது கிடைக்கும் இது கிடைக்கும் என்பது உண்மை ஆனால் ஏற்படுகின்ற பாதகத்தையும் மனதிலே கொள்ளவேண்டும்.

அவர்கள் அமைச்சுப் பதவிகளை பெற்ற பின் அரசாங்கம் தமிழ் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றம் மற்றும் பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. இவ்வாறு பலவிதமான விடயங்களை செய்து கொண்டு போகின்றனர். இவர்கள் தங்களுடைய அமைச்சு பதவிகளை வைத்துக் கொண்டு அவற்றுக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது இருக்கின்றனர்.

ஆகவே இதனை நாங்கள் முற்றாக புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் அரசாங்கத்துடன் இருந்து எதனை பெறலாம் என்ற நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றதுடன் அவர்கள் சொந்த அரசிலுக்காக ஈடுபடுகின்றனர் என்பது எங்களுடைய கருத்து என்றார்.

மட்டக்களப்பு நிருபர் சரவணன்

No comments:

Post a Comment