எஸ்.எம்.எம்.முர்ஷித்
எமது நாட்டில் இனியொருபோதும் முஸ்லிம் சமூகம் கலவரத்தினால் அடக்கப்படமாட்டாது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் தெரிவித்துள்ளார்.
ஆனால் அரசியல் ரீதியில் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் முஸ்லிம் சமூகத்தை நசுக்குவதற்கான சதித்திட்டங்கள் முழுமையாக அரங்கேற்றப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மட்டக்களப்பு - ஏறாவூர் அமீர் அலி வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பாடசாலை அதிபர் எஸ். அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்ஜே. றிப்கா மற்றும் எம்எச்எம். றமீஸ், பிரதேசக் கல்விப் பணிப்பாளர் எம்.எம். மௌஜுத் மற்றும் பாடசாலை அதிபர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பொதுப்பரீட்சையில் திறமை காட்டிய மற்றும் சிறந்த மாணவர்கள் இங்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் இதன்போது அரங்கேற்றப்பட்டன.
முன்னாள் முதலமைச்சர் இங்கு தொடர்ந்து பேசுகையில் இதுவரை காலமும் சந்திக்காத வகையிலான ஒரு தேர்தலையே இம்முறை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கவுள்ளது.
இந்த நாட்டில் கடந்த காலங்களில் ஏதோ ஒரு வகையில் முஸ்லிம் சமூகம் ஆட்சியைத் தீர்மானிக்கின்றவர்களாக அல்லது அரசியல் மாற்றத்தில் உள்வாங்கப்படுகின்ற சமூகமாக இருந்தது. எதிர்காலத்தில் அவ்வாறான அந்தஸ்த்தினை இழந்து முஸ்லிம் சமூகம் பாரிய சவாலை எதிர்நோக்கவுள்ளது. இதனால் முஸ்லிம் சமூகம் விழித்துக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம் சமூகத்திற்கான பள்ளிவாயல்கள் சனத்தொகைக்கேற்பவே இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்து அபிலாஷைகளை அடக்கும் ஆபத்தான சூழல் எமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது. இவ்வாறான கால கட்டத்தில் இராஜதந்திரத்துடன் செயற்பட வேண்டியுள்ளது.
இராஜதந்திரத்துடன் நிலைமையை அணுகத் தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வது சமூக துரோகமாகவே கருதப்படும் என்றார்.
No comments:
Post a Comment