காத்தான்குடி பிரதேச செயலக கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் இன்று (29) பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இக்கூட்டத்தில் நகர சபை, தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், வர்த்தகர் சங்கம், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் வேண்டுகோளுக்கிணங்க நாளை 30.03.2020 அன்று வங்கிகள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள், ஏனைய வியாபார நிறுவனங்கள் அனைத்தையும் மூடி, வீடு வீடாக பொருட்களை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டவர்கள் மூலமாக பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவு செய்ய வழிசமைத்தல் எனவும், அவ்வாறு பொருட்கள் விநியோகிக்க அனுமதி பெற்றவர்களது விபரங்களை நகர சபையினால் அச்சிட்டு துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுதல் எனவும் தீர்மனிக்கப்பட்டது.
நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளையில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனவும் அதற்கான முன் ஆயத்தங்களை அரச நிறுவன மட்டத்தில் எவ்வாறு மேற்கொள்வது எனவும் ஆராயப்பட்டது.
அத்துடன் கடந்த 26.03.2020 ஆந் திகதிக்குப் பின்னர் வெளி மாவட்டங்களில் இருந்தும், குறிப்பாக கொரோனா அபாய வலயமாகப் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற மாவட்டங்களில் இருந்து குறுக்கு வழியாக காத்தான்குடிப் பிரதேசத்திற்கு வந்துள்ள 150 இற்கு மேற்பட்டவர்களின் விபரமும் ஆராயப்பட்டன.
இதன்போது கடந்த 21.03.2020 ஆந் திகதிக்குப் பின்னர் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை மேற்கொள்வதெனவும், இதன் பின்னரும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தல் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அவ்வாறு வருபவர்களை பொதுமக்கள் தமது பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பொதுச் சகாதார பரிசோதகர்களிடம் அறிவிக்க வேண்டும் எனவும் அதற்கு பொதுமக்களை துண்டுப் பிரசுரங்கள் மூலம் அறிவூட்டப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
வெளி மாவட்டங்களுக்குச் சென்று பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்களை இப்பிரதேசத்திற்கு வந்தவுடன் நகர சபைக்குப் பொறுப்பான இடத்தில் தொற்று நீக்கம் செய்வதுடன் பிரதேசத்தில் வீடு வீடாக பொருட்கள் விநியோகிக்கும் வாகனங்களையும் தொற்று நீக்கம் செய்வதற்காக இதே நடைமுறையினைப் பின்பற்றுதல் எனவும், வெளிமாவட்டங்களில் இருக்கும் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இப்பிரதேசத்திற்கு வருவதை இயன்றளவு குறைக்க வேண்டும் என அறிவுறுத்துதல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு செயலணியின் உறுப்பினர்களான காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர். எம்.எஸ்.எம். ஜாபிர், நகர சபைச் செயலாளர் எம். ஆர்.எப். றிப்கா சபீன், சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.எம். நசீர்தீன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வர்த்தகர் சங்கத் தலைவர் கே.எல்.எம். பரீட், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.சீ.எம்.ஏ. சத்தார், உபதலைவர் பொறியியலாளர். ஏ.எம்.எம். தௌபீக், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபில்யூ. ஏ. துமிந்த, இராணுவ அதிகாரி கெப்டன் டீ.கே.எம். சேனாரத்ன உட்பட, அரச உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
எம்.ஐ.எம். கமால்தீன் & எம்.எஸ்.எம். நூர்தீன்
No comments:
Post a Comment