முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தலை மறைவு - எட்டாவது சந்தேக நபரான சுரேந்திரன் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, March 7, 2020

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தலை மறைவு - எட்டாவது சந்தேக நபரான சுரேந்திரன் கைது

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளில் ஒருவராகக் கருதப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்ய, குற்றவியல் புலனாய்வுத்துறை (சிஐடி) அதிகாரிகள் அடங்கிய குழு, பத்தரமுல்ல ரஜமல்வத்த மாவத்தையில் அமைந்துள்ள ரவி கருணாநாயக்கவின் இல்லத்துக்கு நேற்று சென்றபோது அவர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். 

சுமார் ஒரு மணி நேரம் வரை ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் தங்கியிருந்த குற்றப் புலனாய்வுத்துறையின் அதிகாரிகள் வீட்டை சோதனையிட்டனர். 

ரவி கருணநாயக்க தலைமறைவாகியுள்ளதாக அறிந்த பின்னர் குற்றப் புலனாய்வுத்துறையினர் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். 

எட்டாவது சந்தேக நபரான ஒருவரான பேர்பச்சுவல் நிறுவனத்தின் பணிப்பாளரான முத்துராஜா சுரேந்திரன் நேற்று குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டார். 

இவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 18ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது. 

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க உட்பட 10 பேரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் பிடியாணை பிறப்பித்தது. 

ரவி கருணநாயக்க, அர்ஜுன் மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனா உட்பட 10 பேரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்க சட்ட மா அதிபர் உத்தரவு பிறப்பித்தார். 

2016 மத்திய வங்கி பிணை மோசடியின் பிரதான சூத்திரதாரிகளாக இவர்கள் இருந்துள்ளமையை அடிப்படையாக கொண்டே சட்ட மாஅதிபர் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

No comments:

Post a Comment