சீனாவில் கொரோனா கண்காணிப்பு முகாமாக இயங்கிய ஹோட்டல் இடிந்து விழுந்ததில் 70 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
சீனாவில் கொரோனா வைரசின் ஆதிக்கம் உச்சத்தில் இருக்கும் நிலையில், அங்குள்ள பீஜியான் மாகாணத்தின் குவான்சு நகரில் உள்ள 6 மாடி ஹோட்டல் ஒன்று கொரோனா கண்காணிப்பு முகாமாக மாற்றப்பட்டு இருந்தது.
கொரோனா பாதிப்பு இருக்கலாம் என கருதப்படும் ஏராளமானோர் இந்த ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த ஹோட்டல் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்தவர்கள் 70 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த சுமார் 700 வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர்.
இதில் 38 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களையும் மீட்கும் பணிகள் வேகமெடுத்து உள்ளது. மீட்புக் குழுவினர் முகக்கவசம் அணிந்தவாறே இந்த பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹோட்டல் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 80 அறைகள் உள்ளன. அந்த அறைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment