மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்யும் ஒற்றுமை பயணத்தில் முன்னாள் மாகாண அமைச்சர் சுபையிர் ஹாஜி இணைய வேண்டும் - முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அழைப்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, March 15, 2020

மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்யும் ஒற்றுமை பயணத்தில் முன்னாள் மாகாண அமைச்சர் சுபையிர் ஹாஜி இணைய வேண்டும் - முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அழைப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்களை கையளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள நிலையில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், காலத்தின் தேவை கருதி மக்கள் பிரதிநிதிகளது இணைவுகளும் அவசியமாகி நிற்கின்றன என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக முன்னாள் மாகாண சுகாதார அமைச்சர் சுபையிர் ஹாஜியார் அவர்கள் போட்டியிடலாம் என சமூக ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்வதற்காக அனைவரோடும் இணைந்து பயணிக்க தயார் என்ற ஒற்றுமையினை வலியுறுத்தும் வகையிலான அவரது ஊடக அறிக்கையினை உளமாற வரவேற்கிறேன்.

இந்நிலையில் எமது பிரதிநிதித்துவத்தினை தக்க வைத்துக் கொள்வதற்காக முன்னாள் மாகாண சுகாதார அமைச்சர் சுபையிர் அவர்களை எம்முடன் இணைந்து பயணிக்குமாறு திறந்த அழைப்பினை விடுக்கிறேன்.

அரசியல் கருத்து வேறுபாடுகளையும், வேற்றுமைகளையும் களைந்து மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்வதற்காக, அனைத்து தரப்பினையும் ஒரே கொடியின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கையினை முன்னெடுக்க மக்கள் பிரதிநிதிகளான உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், உலமாக்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமான ஒன்றாகும்.

இவ்வாறான மானசீகமான தூய்மையான இணைவுகளின் மூலமாக மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்து கொள்ளுகின்ற அதேவேளை எமது பிரதேசத்திலே ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதோடு சுயாதீனமான சுதந்திரமான வன்முறைகள் அற்ற, ஒருவருக்கொருவர் வக்கிரத் தன்மைகள் அற்ற ஒரு தேர்தலினை எதிர்கொள்ள முடியும் என்பதனை எதிர்பார்க்கிறேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad