மரண தண்டனை அளிக்கப்பட்ட இராணுவ வீரரை விடுவிப்பதா ஜனாதிபதியின் கொரோனா நடவடிக்கை ? - வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் கேள்வி - News View

About Us

About Us

Breaking

Thursday, March 26, 2020

மரண தண்டனை அளிக்கப்பட்ட இராணுவ வீரரை விடுவிப்பதா ஜனாதிபதியின் கொரோனா நடவடிக்கை ? - வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் கேள்வி

(எம்.நியூட்டன்) 

கொரோனா வைரசுக்கு எதிராக ஜனாதிபதி போராடப்போகின்றார் என மக்கள் எதிர்பார்க்கையில் அவர் மிருசுவிலில் பொதுமக்களைக் கொலை செய்தமைக்காக உயர் நீதி மன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியை பொது மன்னிப்பளித்துள்ளார் என்பது அரசாங்கத்தின் போக்கு என்ன என்பதை புரிந்து வைக்கிறது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 

முன்னாள் இராணுவ சார்ஜன்ட் 2000 ஆண்டில் எட்டு அப்பாவிப் பொதுமக்களின் படுகொலையில் உயர் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தார். 13 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணைகளின் அடிப்படையிலேயே 2015 ஆனி மாதம் 25 ஆம் திகதி உயர் நீதிமன்று மரண தண்டனை விதித்திருந்தது. 

எனினும் இன்றைய சூழ்நிலையில் அவர் ஜனாதிபதியின் விசேட மன்னிப்பில் வெலிக்கடை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

மிலேச்சத்தனமான படுகொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒருவரை ஜனாதிபதி காலம் நேரம் பார்த்து விடுவித்தது போன்று கொரோனா பீதிக்குள் நாடும் முழு உலகமும் சிக்கியிருக்கும் போது விடுவித்துள்ளார். 

தென்னிலங்கையில் சிங்கள இனவாத ஆதரவை பெறுவதற்கான உத்திகளில் ஒன்றாக அவர் விடுவிக்கப்பட்டிருந்தாலும் இன்றைய நிலையில் சிறைகளில் கைதிகளை வைத்து பார்க்க முடியாது என்று எதாவது கிடைக்கின்ற இடைவெளிக்கு கதைகள் கூறப்படலாம். 

இந்த இடத்தில் இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் இருக்கின்றனர். எத்தனையே அப்பாவி தமிழ் அரசியல் கைதிகள் சந்தேகத்தின் பேரில் சிறைகளில் உள்ளனர். 

இலங்கையில் சிறைகளை மூடினால் கூட ஏன் உலகம் அழிந்தாலும் இவ்வாறான பாரதூரமான மனித உரிமை மீறல்களைச் செய்த அப்பாவிப் பொதுமக்களை கொலை செய்தமையை நீதித்துறை தீர்ப்பளித்த பின்னர் விடுவிப்பதில் எவ்வகை நியாயமும் இருக்க முடியாது. 

ஜனாதிபதியின் இட்மன்னிப்பிற்கு எதிராக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் வீதிக்கு இறங்குவதற்கான இடைவெளிகளையும் கொரோனா வைரஸ் நடவடிக்கை முடக்கியுள்ளது. 

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான படுகொலைகளுக்கு எவ்வகைத்தீர்வும் இந்த நாட்டில் ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது என்று காட்டுவதாகவே ஜனாதிபதியின் இவ்வாறு படுகொலைகளுக்கு நீதிமன்றினால் மரண தண்டனை அளிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜன் விடுவிக்கப்பட்டமையை கருதமுடிகின்றது.

No comments:

Post a Comment