திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் உடல் நியூ ஆவடி ரோட்டில் உள்ள வேலங்காடு மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவுடன் இருந்த தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய பேராசிரியர் க.அன்பழகன் சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் காலமானார்.
அன்பழகன் மரணம் அடைந்ததை அறிந்ததும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் சிந்தினார். வைத்தியசாலைக்கு வந்த தி.மு.க. நிர்வாகிகள் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டனர்.
இதையடுத்து, க.அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தி.மு.க. நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் ராமகிருஷ்ணன் சுப.வீரபாண்டியன், கவிஞர் வைரமுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்பட பலர் அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், அன்பழகனின் இறுதி ஊர்வலம் அவரது வீட்டில் இருந்து மாலையில் புறப்பட்டது. இதில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், எம்.பி கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின், நியூ ஆவடி ரோட்டில் உள்ள வேலங்காடு மயானத்தில் வைக்கப்பட்ட அன்பழகன் உடலுக்கு மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அப்போது துரைமுருகன் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.
அதன்பின்னர், வேலங்காடு மின் மயானத்தில் பேராசிரியர் க.அன்பழகன் உடல் தகனம் செய்யப்பட்டது.
1922 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி திருவாரூர் மாவட்டத்தின், காட்டூர் கிராமத்தில் பிறந்த அன்பழகன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்தார்.
No comments:
Post a Comment