சுற்றுலாத்துறையில் 2025 ஆம் ஆண்டில் 10 பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டுவதை அடிப்படையாகக் கொண்டு விசேட வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த இலக்கை அடைவதற்கான ஐந்தாண்டு உலகளாவிய தகவல் தொடர்பு திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை மூலம் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெறுவதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுமென கூறியிருந்தார்.
இதன் பிரகாரம் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்கான வேலைத் திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. சுமார் 6 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் ஈர்ப்பதை அடிப்படையாக கொண்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போருக்குப் பின்னரான காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து வந்தது. சர்வதேச அளவில் சாதகமான நிலையே அன்று நிலவியது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளில் இலங்கையில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது.
2016 ஆம் ஆண்டின் சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்கு 2.5 மில்லியனாக இருந்தது. ஆனால் அது 2 மில்லியனாக வரையறுக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தாக்குதல்களை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.9 மில்லியனாக குறைவடைந்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் நடுப்பகுதியிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உலகளாவிய தொடர்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் வளைகுடா நாடுகளுக்கான இலக்கு பயண முகவர் நிலையங்களை ஏற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.
அதேபோன்று மேற்குலக நாடுகள் உட்பட உலகளாவிய ரீதியில் முக்கிய நாடுகளில் மக்கள் தொடர்பு நிலையங்களை அமைக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment