காசா, சிரியாவில் இஸ்ரேல் உக்கிர வான் தாக்குதல் : இருவர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, February 24, 2020

காசா, சிரியாவில் இஸ்ரேல் உக்கிர வான் தாக்குதல் : இருவர் உயிரிழப்பு

இஸ்ரேல் மீது சரமாரி ரொக்கெட் குண்டுத் தாக்குதல்களை நடத்திய இஸ்லாமிய ஜிஹாத் போராளிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் காசா மற்றும் சிரியாவில் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் போராளிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலில் மற்றொரு பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையிலேயே இந்த பதிலுக்கு பதில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. 

இதன்போது காசா மற்றும் சிரிய தலைநகர் டமஸ்கஸிற்கு அருகில் “இஸ்லாமிய ஜிஹாத் தீவிரவாதத் தளங்களை” இஸ்ரேலிய விமானப் படை இலக்கு வைத்ததாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல்-காசா எல்லைப் பகுதியில் இஸ்லாமிய ஜிஹாத் போராளி ஒருவர் இஸ்ரேல் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதில் நடவடிக்கையாகவே பலஸ்தீன போராளிகள் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது 20 க்கும் அதிகமான ரொக்கெட் மற்றும் மோட்டார் குண்டுகளை வீசினர்.

2008 ஆம் ஆண்டு தொடக்கம் ஹமாஸ் போராளிகளுடன் சேர்ந்து இஸ்ரேலுடன் மூன்று போர்களில் ஈடுபட்டிருக்கும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு காசா மற்றும் சிரியாவில் இயங்கி வருகிறது.

சிரியாவில் இஸ்லாமிய ஜிஹாத் செயற்பாடுகளின் மையப்புள்ளி உட்பட, தலைநகர் டமஸ்கஸின் புறநகர் பகுதியில் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இதில் தமது இரு போராளிகள் கொல்லப்பட்டதை இஸ்லாமிய ஜிஹாத் நேற்று உறுதி செய்தது.

2011 இல் சிரியாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது தொடக்கம் சிரியாவில் இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் சிரிய அரச படை அதேபோன்று ஈரானிய படை மற்றும் ஹஸ்புல்லா போராளிகளை இலக்கு வைத்தே தாக்குதல்கள் இடம்பெறுகின்றன.

இவ்வாறான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் நேரடியாக பொறுப்பேற்பது மிக அரிதான ஒன்றாக உள்ளது.

காசாவெங்கும் இஸ்லாமிய ஜிஹாத் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எல்லைக்கு அருகில் ரொக்கெட் குண்டை வீசுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த குழு ஒன்றை இலக்கு வைத்தும் தாக்குதல் நடத்தியதாக அது குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் நால்வர் காயமடைந்ததாக காசா சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரான் ஆதரவு கொண்ட இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு பலஸ்தீனத்தில் இயங்கும் பலம்மிக்க போராட்டக் குழுக்களில் ஒன்றாகும். கடந்த நவம்பரில் அந்த அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மூன்று நாட்கள் நீடித்த மோதலில் 35 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இஸ்ரேலில் ஓர் ஆண்டுக்குள் மூன்றாவது முறையாக வரும் மார்ச் இரண்டாம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் இடம்பெற்ற இரு தேர்தல்களிலும் எந்தத் தரப்பும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியாத நிலையிலேயே இந்த அரசியல் இழுபறி ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment