ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் குழப்பம் தேர்தலை இலக்கு வைத்து அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம் - வட மத்திய மாகாண ஆளுநர் - News View

Breaking

Post Top Ad

Monday, February 17, 2020

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் குழப்பம் தேர்தலை இலக்கு வைத்து அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம் - வட மத்திய மாகாண ஆளுநர்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் குழப்ப நிலையானது தேர்தலை இலக்கு வைத்து அரங்கேற்றப்படும் அரசியல் நாடகமாகும். எத்தகைய வேடங்களை அக்கட்சி உறுப்பினர்கள் போட்டாலும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியாது. எமது அணியே வெற்றி பெறும் என்று லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், வட மத்திய மாகாண ஆளுநருமான திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். 

கொட்டகலை பகுதியில் நேற்று 16.02.2020 நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "கடந்த ஐந்தாண்டுகளில் வங்குரோத்தான ஆட்சியையே ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்தது. தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டதுடன், பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டது.

வருமானம் கிடைக்கும் வழிமுறைகளும் முடங்கின. இதன் காரணமாகவே ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரை நாட்டு மக்கள் தோற்கடித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆணை வழங்கினார்கள்.

5 ஆண்டுகளாக மக்கள் சிறந்த பாடத்தைக் கற்றுக் கொண்டுள்ளனர். எனவே, இனியும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள். தேர்தலை இலக்கு வைத்து பல நாடகங்களை அரங்கேற்றினாலும் அவை மக்கள் மத்தியில் எடுபடாது.

மூன்றிலிரண்டு பெரும்பான்மையை எமது அணியால் பெற முடியும் என்பதை உறுதியாக கூற முடியாது. மக்கள் மனம் வைத்தால் அதுவும் சாத்தியமே." என்றார்.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, "பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். இதன்பிரகாரம் அரசாங்கமும் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

பெருந்தோட்டக் கம்பனிகளிலுள்ள பிரதானிகள் சம்பளம் மட்டுமல்ல மேலதிக கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொண்டு சொகுசாக வாழ்கின்றனர். ஆனால், சாதாரண மக்களுக்கு சம்பள உயர்வை வழங்க இழுத்தடிக்கின்றனர். இது அநீதியாகும்.

கம்பனிகளும் இலாபம் உழைக்க வேண்டும். அதன்மூலம் தொழிலாளர்களுக்கு பலனும் கிட்ட வேண்டும். எனவே, சில அரசியல் சக்திகளுடன் இணைந்துகொண்டு சம்பள உயர்வை வழங்க மறுக்கும் கம்பனிகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.

நட்டத்தில் இயங்கும் கம்பனிகளை எவ்வாறு இலாபம் உழைக்கும் துறையாக மாற்றுவது என்பது தொடர்பில் எமது கட்சியால் அரசாங்கத்திடம் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன." என்றார்.

அதேவேளை, இலங்கை இராணுவத் தளபதிக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைக்கும் அவர் கடும் கண்டனத்தை வெளியிட்டார். தவறான வழியில் பிரயோகிக்கப்படும் அழுத்தமே அது எனவும் சுட்டிக்காட்டினார்."

மலையக நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad