(இராஜதுரை ஹஷான்)
நாட்டின் சில பிரதேசங்களில் கடந்த திங்கட்கிழமை இரண்டு மணித்தியால மின் விநியோகத்தடை ஏற்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குழு நியமிக்கப்பட்டுள்ளது. எக்காரணிகளுக்காகவும் மின் விநியோகத்தடை தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் இலங்கை மின்சார சபைக்கு கிடையாது என மின்வலுத்துறை இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
மின்வலுத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த திங்கட்கிழமை நாட்டில் சில பிரதேசங்களில் இரண்டு மணித்தியாலம் மின்விநியோகத் தடை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கை மின்சார சபை செலுத்த வேண்டிய கடன் தொகை வரைறையற்றதாக காணப்படுவதால் மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தினோம் என்று கனியவள கூட்டுத்தாபனம் குறிப்பிடும் காரணிகள் ஏற்றுக் கொள்ள முடியாது.
கடந்த திங்கட்கிழமை மின்விநியோகத் தடைக்கான காரணம் போதுமான எண்ணெய் அப்போது சேமிப்பில் இருக்கவில்லை என்று கூட்டுத்தாபனம் குறிப்பிடும் காரணியும் பொய்யானது.
அன்றைய தினம் கெரவலபிடிய மின்நிலையத்தில் 1500 தொன் எரிபொருள் இருந்துள்ளது. ஆகவே இவர்களின் முரண்பாடான கருத்துக்கள் பாரிய சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளன. இலங்கை மின்சார சபை பாரிய கடன் நெருக்கடிக்குள் உள்ளாவதற்கு கடந்த அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளே பிரதான காரணமாகும்.
இலங்கை மின்சார சபை கனிய வள கூட்டுத்தாபனத்திற்கு 2017 ஆம் ஆண்டு 30 பில்லியனும், 2019 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் 81 பில்லியனும் கடன் செலுத்த வேண்டியுள்ளது.
மறுபுறம் தனியார் நிறுவனங்களுக்கு 2019 ஆம் ஆண்டு மாத்திரம் 39 பில்லியனும அரச வங்கிகளுக்கு 120 பில்லியனும் கடன் செலுத்த வேண்டியுள்ள நிலைக்கு மின்சார சபை நட்டமடைந்த ஒரு சபையாக தொழிற்படுகின்றது. இவ்வருடத்திற்குள் இந்த கடன்களை முடிந்த அளவிற்கு மீள்செலுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
மின்சார சபையும், கணியவன கூட்டுத்தாபனமும் மின்வலுத்துறை அமைச்சின் கீழ் இயங்குவதால் தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது. மின் விநியோகத் தடைக்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
கடந்த அரசாங்கத்தில் அனைத்து அமைச்சுக்களிலும் மோசடிகள் இடம் பெற்றுள்ளன அவை இன்று அமைச்சுக்களின் செயலாளர்களின் ஊடாக ஆராயப்பட்டு வருகின்றன. இவர்கள் மக்களுக்கு சேவையாற்றவில்லை மாறாக தங்களின் சுய இலாபத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு செயற்பட்டுள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment