யானையா? அன்னமா? ஆராய குழு நியமனம், சிறு குழுவிற்கு கட்சியை வழிநடத்த இடமளிக்க முடியாது - வஜிர எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Monday, February 17, 2020

யானையா? அன்னமா? ஆராய குழு நியமனம், சிறு குழுவிற்கு கட்சியை வழிநடத்த இடமளிக்க முடியாது - வஜிர எம்.பி.

யானைச் சின்னமா - அன்னமா என முடிவு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதென ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். 

1947 ஆண்டுக்குப் பின்னர் தொடர்ச்சியாக யானைச் சின்னத்திலேயே போட்டியிட்டு வருவதாக கூறிய அவர், கட்சி யாப்புக்கு முரணாக அந்தக் குழுவும் செயற்பட முடியாதென்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சிலர், சில காரணங்களையும் கூறி வருகின்றனர். 

தமிழ் முஸ்லிம் கட்சிகள் யானை சின்னத்தில் போட்டியிட்டாலும் அவர்களுடன் தனியான ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும். அதன் பிரகாரம் ஒழுக்காற்று நடவடிக்கைகளை அந்த கட்சிகளுக்கே செய்ய முடியும். 

ஹக்கீம், திகாம்பரம் போன்றவர்கள் எம்முடன் இணைந்து போட்டியிட்டாலும் கட்சி நடவடிக்கைகளை தனியாகவே முன்னெடுக்கின்றனர். பெரும்பான்மையினரின் முடிவுக்கமையவே சின்னம் முடிவு செய்யப்படும்.

இதனை விடுத்து சிறு குழுவிற்கு கட்சியை வழிநடத்த இடமளிக்க முடியாது. யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே பெரும்பான்மையினரின் கோரிக்கையாகும். யானைச் சின்னத்தை ஈடுவைக்க இடமளிக்க முடியாது.

1947 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொடர்ச்சியாக யானைச் சின்னத்திலேயே போட்டியிட்டு வருகின்றோம். யானைச் சின்னத்தின் கீழ் வெற்றி தோல்வி இரண்டும் கிடைத்துள்ளது. கூட்டணி அமைத்தும் பல தடவைகள் போட்டியிட்டிருக்கின்றோம்.

வேறுபட்ட கருத்து உள்ளதாலேயே, சின்னத்தை தீர்மானிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவும் கட்சி யாப்பை மீறிச் செயற்பட முடியாது என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment