ஒவ்வொரு குடிமகனும் இந்நாட்டுப்பிரஜை என்ற சிந்தனை மூலமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் -கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 5, 2020

ஒவ்வொரு குடிமகனும் இந்நாட்டுப்பிரஜை என்ற சிந்தனை மூலமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் -கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்நாட்டுப்பிரஜை என்ற சிந்தனையுடன் வாழ்வதன் மூலமே இந்நாட்டை முன்னோக்கிய நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின விழா நேற்று செவாய்க்கிழமை (04) கல்முனை நகர மத்தியில் அமைந்துள்ள கல்முனை வாசலில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில் "நாட்டின் 72ஆவது சுதந்திர தினத்தை நாங்கள் புதியதொரு காலகட்டத்தில் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். 'பாதுகாப்பான தேசம், சுபீட்சமான எதிர்காலம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினூடாக ஒரு சிறந்த அரசியல் கலாசாரத்தையும் ஸ்திரமான பொருளாதார கட்டமைப்பையும் உருவாக்குவதுடன் அந்நிய சக்திகளிடமிருந்து இந்த நாட்டை பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்திருக்கிறார்.
72 வருட கால சுதந்திர இலங்கையின் வரலாற்றை திரும்பிப் பார்க்கின்றபோது 1948ஆம் ஆண்டு முதல் இற்றை வரை மிகவும் கஷ்டமான, துன்பகரமான சூழ்நிலைகளைக் கடந்தே எமது நாடு பயணித்து வந்திருக்கிறது. 1956ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டமை ஒரு துரதிஷ்டமான சரித்திரமாக அமைந்திருக்கிறது.

இலங்கை போல் சிங்கப்பூர் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று அந்நாடு விருப்பம் கொள்ளுமளவுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த எமது நாடு, இன முரண்பாட்டு யுத்தம் காரணமாக சீரழிந்து, பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவைக் கண்டிருக்கிறது. சுமார் முப்பது வருட கால யுத்தம் முடிவுக்கு வந்து சில வருடங்களில் நாடு ஓரளவு முன்னேறி வந்து கொண்டிருந்தபோது பாரிய அதிர்ச்சியான சம்பவமொன்று நடந்தேறியமையானது மிகப்பெரும் துன்பியல் வரலாறாகும்.

இவ்வாறான அதிர்ச்சியான, துரதிஷ்டமான சம்பவங்கள் இனியொருபோதும் இடம்பெறாமல் எமது தேசம் பாதுகாக்கப்படும் என்கிற உத்தரவாதத்தின் மீதே புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அவரது கொள்கைகளாக பொருளாதார அபிவிருத்தி, திடமான பாதுகாப்பு, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பன காணப்படுகின்றன. இம்மூன்று கோட்பாடுகளும் உள்ளடக்கப்பட்டவையாகவே நாட்டின் எதிர்காலம் அமைந்திருக்க வேண்டும்.

இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் சந்தோசமாக, சுபிட்சமாக வாழ வேண்டும். இதற்கான உத்தரவாதங்களும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நான் இந்த நாட்டுப்பிரஜை என்ற சிந்தனையுடன், இலங்கையர் என்ற கொள்கை உறுதிப்பாட்டுடன் வாழ வேண்டும். அதன் மூலமே இந்நாட்டை முன்னோக்கிய நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.
அந்த வகையில் நாட்டின் எதிர்காலத்திற்காக, சுபீட்சமான தேசமொன்றை கட்டியெழுப்புவதற்காக கல்முனை மாநகர சபையும் மக்களும் ஒன்றுபட்டு உழைப்பார்கள் என்ற நம்பிக்கையை இச்சந்தர்ப்பத்தில் வெளியிடுகின்றேன்" என்று முதல்வர் ஏ.எம்.றகீப் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.ஜே.பிரதீப், கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த, கடற்படை கட்டளை அதிகாரி பண்டார உள்ளிட்ட பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகளும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் மாநகர சபையின் பொறியியலாளர் ரி.சர்வானந்தன், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், பிரதி ஆணையாளர் எம்.ஐ.எம்.பிர்னாஸ், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப் உள்ளிட்ட மாநகர சபை உத்தியோகத்தர்களும் கல்முனை வர்த்தகர் சங்கத் தலைவர் கே.எம்.சித்தீக் உட்பட சமயப் பெரியார்கள், அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களும் பங்கேற்றிருந்தனர்.

கல்முனை ஸாஹிராக் கல்லூரி மற்றும் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவர்களின் பேண்ட் வாத்திய அணி வகுப்புகளும் இடம்பெற்றன.

No comments:

Post a Comment