(செ.தேன்மொழி)
கேகாலை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குறிப்பிட்டு மாத்தளை - தல்கொடபிட்டி வீதியை மறித்து உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் பிரதேச வாசிகளும் இணைந்து மேற்கொண்ட ஆர்பாட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தல்கொடபிட்டி வீதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டம் காரணமாக அந்த வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், குறித்த பகுதியின் பாதுகாப்பிற்காக பொலிஸாரும் இணைக்கப்பட்டிருந்தனர்.
கொக்கரெல்ல பொலிஸார் கடந்த வருடம் டிசெம்பர் 27 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபரொருவரை கைது செய்து, குருணாகலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தியுள்ளனர். இதன்போது நீதிவான் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, அவர் கேகாலை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டார்.
இவர் கடந்த மாதம் 29 ஆம் திகதி சிறைச்சாலையில் உயிரிழந்ததாக குறிப்பிட்டு சடலம் உறவினர்களுக்கு கையளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது உயிரிழப்பிற்கு சிறைச்சாலை அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டும் என்றும் இந்த சம்பவம் தொடர்பான முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் குறிப்பிட்டே அவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
குருணாகலை பிரிவின் பதில் பொறுப்பதிகாரியும் கோகாலை மாவட்ட உப பொலிஸ் அத்தியட்சகரும் ஆர்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வந்து சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில் தெளிவுபடுத்தியதை அடுத்து ஆர்பாட்டாளர்கள் கலைந்து சென்றுள்ளதுடன், வாகன போக்குவரத்தும் வழமைக்கு திரும்பியுள்ளது.
No comments:
Post a Comment