ஐக்கிய தேசிய முன்னணி - கூட்டமைப்பு கூட்டாட்சியில் யாழ்ப்பாணத்திற்கு அநீதி விசாரணைக்கு அமைச்சரவையில் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 3, 2020

ஐக்கிய தேசிய முன்னணி - கூட்டமைப்பு கூட்டாட்சியில் யாழ்ப்பாணத்திற்கு அநீதி விசாரணைக்கு அமைச்சரவையில் தீர்மானம்

கடந்த அரசாங்கத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற சென்னை விமான நிலையத்திற்கான விமானப் போக்குவரத்துக்காக பயணிகளிடம் இருந்து பெருந்தொகையான விமான நிலைய வரி அறவிடப்படுகின்றமை தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கடற்றொழில் மற்றும் நீர்வாக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயத்தை அமைச்சரவையின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் ஊடகப்பிரிவு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு பயணங்களை மேற்கொள்வோருக்கான விமான நிலைய வரி ஆறாயிரம் ரூபாவாகக் காணப்படுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகளிடம் இருந்து 12,000 ரூபாய் அறிவிடப்படுகின்றமை யாழ்ப்பாண மக்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற மோசடியாகும். 

அடிப்படை வசதிகள்கூட முழுமையாக நிறைவு செய்யப்படாத நிலையில் கடந்த ஆட்சியாளர்களினால் தேர்தலை நோக்கமாக கொண்டு யாழ்ப்பாண விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்துடன் ஒப்பிடுகின்றபோது குறைந்த பரப்பு தூரத்தைக் கொண்ட சென்னைக்கான பயணிகளிடம் இருந்து விமான நிலைய வரி இரண்டு மடங்காக அறவிடப்படுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்த கூட்டரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு எதிரான இந்த தீர்மானமானது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார். 

அவரின் கோரிக்கையின் நியாயத்தினை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏகமனதாக தீர்மானித்தது.

அதேபோன்று, ஜேர்மன் அரசாங்கத்தின் அனுசரணையில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட ஜேர்மன் ரெக் எனப்படும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் நிலவிவருகின்ற குறைபாடுகள் தொடர்பான விடயங்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அது தொடர்பாகவும் உரிய விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நிறுவனம் சிறப்பாக செயற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலிய அபிவிருத்தி திட்டத்தில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றிருப்பதாகவும் அவை தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பிரிவு
கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சு

No comments:

Post a Comment