கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் கடற்றொழில் தொடர்பான சட்டங்கள் பின்பற்றப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துதல் மற்றும் மீன் வள அபிவிருத்தி போன்ற வேலைத் திட்டங்களை வினைத் திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினாhல் புதிய கட்டிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் கட்டிடத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த கட்டிடம் நேற்று 02.01.2019) திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் செயற்பாடுகளும் நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பப் பிரிவானது, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு பிரிவாகும்.
2018ஆம் ஆண்டு முதல் இப்பிரிவால் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுக்குப் பின்னர் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் சுமார் 33 வேலைத் திட்டங்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விரைவாகவும் வினைத்திறனாகவும் செயற்பாடுகளை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக திணைக்களத்தின் முக்கிய பணிகளான மீனவர்களை பதிவு செய்தல் கப்பல்களை பதிவு செய்தல் மீன்பிடி அடையாள அட்டைகளை வழங்குதல் மற்றும் மீன்பிடி உரிமங்களை வழங்குதல் உட்பட பல கடமைகளை நவீன மென்பொருளின் உதவியுடன் உடனடியாகவே நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
திணைக்களத்தால் வழங்கப்பட்ட தகவல்களின் உதவியுடன் முழு இலங்கையையும் உள்ளடக்கும் விதமாக அனைத்து திணைக்கள அலுவலர்களும் பொதுவான வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷந்த பெரேரா, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்கா மற்றும் அமைச்சு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment