உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பாகுபாட்டிற்கு எதிராக கடும் நடவடிக்கை, அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யவும் நடவடிக்கை - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, January 2, 2020

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பாகுபாட்டிற்கு எதிராக கடும் நடவடிக்கை, அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யவும் நடவடிக்கை - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை

உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக பாரபட்சமான நடைமுறைகளை கடைப்பிடிக்கும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) அறிவித்துள்ளது.

"ஹிக்கடுவ மற்றும் அறுகம்பே ஆகிய பகுதிகளில் உள்ள ஒரு சில உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு நுழைய அனுமதி மறுக்கப்படுவதாக, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பல்வேறு முறைப்பாடுகள் வந்துள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட உணவகங்கள் ‘வெளிநாட்டினருக்கு மட்டும்’ (‘foreigners only’) எனும் கொள்கையைக் கொண்டிருப்பதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமர்லி பெனாண்டோ தெரிவிக்கையில், "எமது அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமையை அளிக்கிறது. 

எந்தவொரு நபரும், கடைகள், பொது உணவகங்கள், ஹோட்டல்கள், பொது பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் பொது இடங்களுக்குள் நுழைவதற்கான கட்டுப்பாடு, அணுகல் தொடர்பான எந்தவொரு இயலாமை, பொறுப்பு, கட்டுப்பாடு இனம், மதம், மொழி, சாதி, பாலினம் காரணமான வேறுபாடுகள் அல்லது உடல் ஊனம், இயலாமை, பொறுப்புடைமை, கட்டுப்பாடு அல்லது நிபந்தனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். பகிர்ந்து கொண்டார்.

சுற்றுலா பயணிகள் வருகை தராத நாட்களில் மாத்திரமல்லாது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற எந்தவொரு கடினமான காலத்திலும் சுற்றுலாத்துறையை செயல்படுவதற்கு உள்ளூர் சுற்றுலா பயணிகளே உறுதுணையாக இருந்தார்கள், என்பதை மறுக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ள அதிகார சபை, இத்தகைய பாரபட்சமான நடைமுறைகளைத் தவிர்க்குமாறு, அனுமதிப்பத்திரம் பெற்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் அத்தகைய நிறுவனங்கள், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவற்றின் அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்த அல்லது இரத்து செய்ய SLTDA நடவடிக்கை எடுக்கும் என்றும், இலங்கையர்களுக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கும் சேவை செய்யக்கூடிய உணவகங்களுக்கு இவ்வாறான இடங்களில் புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கும் என்றும் அதன் தலைவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment