(எம்.மனோசித்ரா)
மிலேனியம் சவால் ஒப்பந்தத்துக்கு தற்போது (எம்.சி.சி) எதிர்ப்பு தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்த போது ஏன் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கேள்வியெழுப்பினார்.
இன்று நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச எம்.சி.சி ஒப்பந்தத்தை புறக்கணிப்பதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக கூறுகின்றார்.
அவர் அமைச்சரவையில் அங்கத்துவம் வகித்த காலத்திலேலேயே இந்த ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. இந்த ஒப்பந்தம் நாட்டுக்கு பாதகமானது என்று தெரிந்திருந்தால் ஆரம்பத்திலேயே இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்பதே எமது கேள்வியாகும்.
தற்போது நாம் எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி போலியான பிரசாரங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.
அந்த ஒப்பந்தத்தில் என்ன விடயங்கள் கூறப்பட்டிருக்கின்றன என்பது தொடர்பில் தெளிவினைப் பெற்றுக் கொள்ளுவதற்கும் அது தொடர்பில் முழுமையாக அறிந்து கொள்வதற்குமே ஒப்பந்தம் தொடர்பில் ஆராய விஷேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
எம்.சி.சி ஒப்பந்தம் மாத்திரமின்றி எக்சா, சோபா மற்றும் சிங்கப்பூர் ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியிருக்கிறது.
மாறாக ஐ.தே.க கூறுவதைப் போன்று நாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயற்சிக்கவில்லை. மக்களால் புறக்கணிக்கப்பட்ட குழுவினரால் முன்வைக்கப்படும் இவ்வாறான போலியான பிரசாரங்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்துவதில்லை.
நாட்டிலுள்ள காணிகளை விற்பனை செய்வதற்கு எமது அரசாங்கம் முயற்சிப்பதாகவும் ஐ.தே.க குற்றம் சுமத்துகிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினதும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் ஆட்சியின் கீழ் எந்த சந்தர்ப்பத்திலும் தேசிய சொத்துக்கள் விற்கப்படமாட்டாது என்று மக்களுக்கு உறுதியளிக்கின்றோம்.
அத்தோடு வரிகளை குறைத்து எவ்வாறு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்று கேள்வியெழுப்படுகிறது. வரிகளை குறைக்காமல் ஒருபோதும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.
வரிகளை குறைக்கும் அதேவேளை மறுபுறம் அநாவசிய செலவுகளை மட்டுப்படுத்தினால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அத்தோடு மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் எதனோல் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டது. இதன் மூலம் தேசிய உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை ஊக்குவிக்க முடியும். தேசிய உற்பத்தியாளர்களுக்கு நன்மை பயக்கும் விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதில் அரசாங்கம் பின்நிற்காது.
இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் கடந்த அரசாங்கத்தால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடனையும் எம்மால் விரைவில் மீள் செலுத்த முடியும். வரி குறைப்புக்கள் கடனை மீள செலுத்துவதில் எவ்விதத்திலும் தாக்கம் செலுத்தாது என்பதோடு கடனை மீள செலுத்துதல் எமது அரசாங்கத்துக்கு பாரிய சவாலாகவும் அமையாது என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment