அரச ஊழியர்கள் தாம் பெறும் சம்பளத்தையும் கடந்த ஒரு சேவையை நாட்டுக்காக நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கின்றேன் - ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 1, 2020

அரச ஊழியர்கள் தாம் பெறும் சம்பளத்தையும் கடந்த ஒரு சேவையை நாட்டுக்காக நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கின்றேன் - ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர

“நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கை” அடிப்படையாகக் கொண்டு வினைத்திறன் மற்றும் பயனுறுதி வாய்ந்த அரச சேவைக்கு அனைத்து அரச ஊழியர்களும் நேர்மையான முறையில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்தில் அரச சேவை மீது ஜனாதிபதி அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

ஜனாதிபதி அலுவலகத்தின் ஊழியர்கள் புத்தாண்டில் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தேசியக் கொடியை ஏற்றி வைத்ததன் பின்னர் தேசிய கீதத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பணிக் குழாமினர் அரச சேவை உறுதிப் பிரமாணத்தை வாசித்து கூட்டாக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

வினைத்திறன் வாய்ந்த மக்கள் நேய அரச சேவையை கட்டியெழுப்புவது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் முக்கிய எதிர்பார்ப்பாகும் என குறிப்பிட்ட ஜனாதிபதியின் செயலாளர், அரச ஊழியர்கள் தாம் பெறும் சம்பளத்தையும் கடந்த ஒரு சேவையை நாட்டுக்காக நிறைவேற்றுவார்கள் என தான் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

அரச சேவையானது மக்களுக்கு சுமையாக இல்லாதிருக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் தொலைநோக்காகும். கடந்த காலங்களில் அரச சேவை உறுதி மொழியானது ஒரு சம்பிரதாயபூர்வமான நிகழ்வாக மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்ததன் காரணமாக மக்களின் நன்மதிப்பை அரச சேவை இழந்திருந்தது.
அரச சேவை பற்றி மக்களிடம் காணப்படும் எதிர்மறையான மனப்பாங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அனைத்து அரச ஊழியர்களும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் செயலாளர் விளக்கினார்.

அரச சேவைக்கு அதிகளவு நிதி செலவிடப்படுகின்றது. ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனமானது அரச சேவையை ஒருபோதும் ஒரு சுமையாக கருதவில்லை. அதன் மூலம் கிடைக்கும் பெறுபேறுகளையும் மக்கள் நலனையும் மேம்படுத்த வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும் என செயலாளர் தெரிவித்தார்.

மக்கள் மைய நாட்டை கட்டியெழுப்புவதற்கு சமத்துவத்தைக் கொண்ட ஜனநாயக நிறுவன முறைமையொன்றை உருவாக்குவதற்கு அரச சேவை உடனடியாக தயாராக வேண்டியதன் அவசியத்தையும் அவர் விளக்கினார்.

ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் பணிக்குழாமினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment