உலகம் முழுவதிலுமுள்ள 170 பாராளுமன்றங்களில் இலங்கை பாராளுமன்றம் உயர்ந்த இடத்தில் இருப்பதுடன், இது உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான பாராளுமன்றமாக மாறியிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
நாட்டில் புதிய ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய அரசாங்கம் செயற்படுகிறது. எதிர்வரும் மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்படும். அதன் பின்னர் புதிய சபாநாயகரைத் தெரிவு செய்ய முடியும்.
அவ்வாறு தெரிவு செய்யப்படும் புதிய சபாநாயகர் இந்த முன்னேற்றத்தை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வாரென நம்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்துக்குள் சகோதாரத்துவத்தை ஏற்படுத்தி, அனைவரும் ஒரே குடும்பத்தவர் போன்று செயற்படும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சபாநாயகர் பதவிக்கு நான் நியமிக்கப்பட்டபோது இருந்த பிரதான எதிர்பார்ப்பாக இருந்தது.
கடந்த காலங்களைத் திரும்பிப் பார்க்கும்போது இது குறித்து திருப்தியடைவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
பிறந்திருக்கும் புத்தாண்டில் பாராளுமன்ற பணியாளர் உத்தியோகபூர்வமாக பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சபாநாயகர் இந்த கருத்துக்களை முன்வைத்தார்.
இந்நிகழ்வில் தேசியக் கொடியை சபாநாயகர் ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பாராளுமன்ற பணியாளர்கள் அனைவரும் அரசாங்க சேவை சத்தியப் பிரமாணம் உறுதி மொழியெடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து பாராளுமன்ற வளாகத்தில் மரம் நடுகை நிகழ்வொன்றும் இடம்பெற்றது. இதில் சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.
இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் (நிர்வாகம்) குஷானி ரோஹனதீர, உதவி செயலாளர் நாயகம் (சட்டவாக்கம்) டிக்கிரி ஜயதிலக, பாராளுமன்ற திணைக்கள பிரதானிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment