கொரோனோ வைரசினால் பாதிக்கப்பட்ட சீன நகரில் 100 அவுஸ்திரேலிய சிறுவர்கள் சிக்குண்டுள்ளனர் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2020

கொரோனோ வைரசினால் பாதிக்கப்பட்ட சீன நகரில் 100 அவுஸ்திரேலிய சிறுவர்கள் சிக்குண்டுள்ளனர்

கொரோனோ வைரஸ் காரணமாக மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள சீனாவின் வுகான் நகரத்தில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சுமார் 100 சிறுவர்கள் சிக்குண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்த நகரில் 100 அவுஸ்திரேலிய சிறுவர்கள் குழந்தைகள் உள்ளனர் என ஏபிசி தெரிவித்துள்ளது. 

ஆறு முதல் 16 வயதிற்குட்பட்ட பலர் சிக்குண்டுள்ளனர், இவர்கள் புது வருட கொண்டாட்டங்களுக்காக தங்கள் குடும்பத்தவர்களுடன் வுகானிற்கு சென்றவர்கள் என ஏபிசி தெரிவித்துள்ளது. 

இதேவேளை தனது கர்ப்பிணி மனைவி குறிப்பிட்ட நகரில் சிக்குண்டுள்ளார் என சென்சென் என்பவர் ஏபிசிக்கு தெரிவித்துள்ளார், போக்குவரத்து தடை காரணமாக மனைவி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார், என அவர் தெரிவித்துள்ளார். 

எனது கர்ப்பிணி மனைவி வழமையாக மருத்துவ பரிசோதனைக்காக செல்லும் டொன்ஜி மருத்துவமனையில் சில கர்ப்பிணிப் பெண்கள் கொரோனோ வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை வைத்தியர்கள் கண்டுபிடித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

குறிப்பிட்ட நகரத்தில் அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு மிகக்குறைவான வசதிகளேயிருக்கலாம், மார்ச் மாதம் பிரசவம் என்பதால் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். 

ஆறு வயது சிறுமியின் தந்தையொருவரும் வுகான் நகரத்தில் சிக்குண்டுள்ள அவுஸ்திரேலிய பிரஜைகளை அழைத்து வருவதற்காக ஸ்கொட் மொறிசன் அரசாங்கம் விமானமொன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்த விடயம் குறித்து சீனாவில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகம் உரிய கவனத்தை செலுத்தவில்லை என வுகானில் சிக்குண்டுள்ள இரண்டு வயது குழந்தையின் தந்தையொருவர் தெரிவித்துள்ளார். 

இரண்டு குழந்தைகளுடன் நாங்கள் வுகானில் சிக்குண்டுள்ளோம், நாங்கள் ஹன்யாங்கில் உள்ள ஹோட்டலில் இருக்கின்றோம், அந்த ஹோட்டலில் நாங்கள் சிக்குண்டுள்ளோம், நாங்கள் வெளியே செல்லலாம் ஆனால் மீண்டும் திரும்பி வருவதற்கு அனுமதியில்லை என லியோ யெயுங் என்பவர் ஏபிசிக்கு தெரிவித்துள்ளார். 

அதிகளவு மரணங்கள் இடம்பெற்றுள்ளதால் நாங்கள் நோய் தொற்றிற்கு ஆளாகும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளோம் இதன் காரணமாக நாங்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை தனது இரு பிள்ளைகளும் மனைவியும் வுகானில் சிக்குண்டுள்ளனர் என தெரிவித்துள்ள நதன் வாங் என்பவர் தனது 11 வயது மகள் நோய்வாய்ப்பட்டுள்ளார் எனவும் அவர்கள் மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்காக சிரமப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

என்னால் உறங்க முடியவில்லை, ஒரு தந்தையாக நான் கடும் மன உளைச்சலிற்கு உள்ளாகியுள்ளேன், எனவும் தெரிவித்துள்ள அவர் அவுஸ்திரேலிய அரசாங்கம் வுகானிலிருந்து தனது பிரஜைகளை வெளியேற்றுவதன் மூலம் சிறுவர்கள் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment