வலப்பனை - மலப்பட்டாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவிற்கு காரணமான கற்குவாரிக்கு எதிராக இன்று தேரர் ஒருவரும் பிரதேசவாசிகளும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
மலபட்டாவ பகுதியில் உள்ள வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 58 வயதான ஜீ.ஜீ . ரங்கபண்டாவும் அவரது மனைவி பிசோ மெனிக்கேயும் (52) அவர்களின் உறவுமுறை பெண் ஒருவரும் (17 வயது) உயிரிழந்தனர்.
உயிரிழந்த தம்பதியினரின் 16 வயதான மகன் இன்னமும் மீட்கப்படவில்லை.
மண்சரிவில் சிக்குண்ட ரங்க பண்டாவின் வீட்டிலிருந்து 100 மீட்டருக்கும் குறைந்த தூரத்தில் அமையப்பெற்றுள்ள பாறையை உடைக்கும் செயற்பாட்டை தடுக்க அவர் முயன்றுள்ளார்.
அங்கு இடம்பெறும் வெடிப்பு செயற்பாடுகளாலேயே மணல் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக மணலின் செறிவு குறைவடைந்து மண் சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக 2007 ஆம் ஆண்டு தேசிய கட்டட ஆய்வு நிலையம் மேற்கொண்ட ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆய்வின் பின்னர் பிரதேசவாசிகள் அங்கிருந்து வெளியேறுமாறு கோரப்பட்டனர். ஆனாலும், அவர்கள் அதற்கு சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
ஆனால், மண்சரிவு அபாயம் உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் கற்குவாரியை அமைப்பதற்கு தேசிய கட்டட ஆய்வு நிலையம் அனுமதி வழங்கியிருந்தது.
நிலத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என சம்பந்தப்பட்ட நிறுவனங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு இந்த கற்குவாரியை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கற்குவாரிக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள சீன நிறுவனம் 2011 இலிருந்து 2015 வரை கண்டி பிரதான வீதியின் ஒரு பகுதியை புனர்நிர்மாணம் செய்துள்ளனர்.
இந்த நிறுவனம் தற்போது ராகல - உடபுஸ்ஸல்லாவ வீதியில் மக்களின் பாரிய எதிர்ப்பினைத் தொடர்ந்தும் கற்குவாரியை கடந்த வருடம் முதல் செயற்படுத்தி வருகின்றனர்.
எதிர்ப்பினைப் பொருட்படுத்தாது அவர்களுக்கு சட்டப்பூர்வமாகக் கிடைக்கப்பெற்ற ஆவணத்தை ஆதாரமாகக் கொண்டு கடந்த மார்ச் முதலாம் திகதியிலிருந்து குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுத்து வருகின்றனர்.
வலப்பனை பிரதேச செயலாளர் சாலிக்க பண்டாரவிடம் வினவிய போது, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் அனுமதியுடன் இது முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கற்குவாரி தொடர்பில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளுமாறு அந்த பணியகத்திற்கு தெரிவித்துள்ளதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment