பாகிஸ்தானுக்கு வருகை தருமாறு பாகிஸ்தான் பிரதமர் விடுத்துள்ள அழைப்பை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷாட் மஹ்மூத் குரேஷி, அலரி மாளிகையில் நேற்று (02) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியபோது பாகிஸ்தான் பிரதமர் விடுத்துள்ள அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தூதுக் குழுவினர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விசேட கடிதமொன்றையும் இலங்கை பிரதமரிடம் கையளித்துள்ளனர்.
இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கீழ் முடியுமென எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின்போது வர்த்தக ஊக்குவிப்பு, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை, விவசாயம் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
No comments:
Post a Comment