சுவிஸ் தூதரக ஊழியர் தகவல்கள் ஒன்றுக்கொன்று முரண் - வெளிவிவகார அமைச்சு அறிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, December 2, 2019

சுவிஸ் தூதரக ஊழியர் தகவல்கள் ஒன்றுக்கொன்று முரண் - வெளிவிவகார அமைச்சு அறிக்கை

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரியும் இலங்கை ஊழியர் எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் தூதரகம் வழங்கிய தகவல்கள் மற்றும் விசாரணைகள் மூலமான தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நவம்பர் 25 ஆம் திகதி நடந்ததாகக் கூறப்படும் குற்றச் செயல் சம்பவம் குறித்து மிக தீவிரமாக கவனத்திற்கொண்ட இலங்கை அரசு, இந்த விவகாரம் குறித்து முழு விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட்டதாக வெளிவிவகார அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, பாதுகாப்புச் செயலாளர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் சுவிஸ் உயர் ஸ்தானிகர் ஹான்ஸ் பீட்டர் மொக் மற்றும் பிரதி தூதரக குழுவினரை சந்தித்து இது தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் தொடர்பான விபரங்களை நேற்று (01) தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து, கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வாக்குமூலம் பெறுவதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணை தம்மிடம் அனுப்பி வைக்குமாறு சட்ட அமுலாக்க அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளுக்கு தூதரகம் இணங்காத போதிலும், விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

விசாரணைகளின் அடிப்படையில், குறித்த பெண் ஊழியரின் போக்குவரத்து வாடகை வாகன சேவை வழங்குனரின் அறிக்கை (Uber தகவல்கள்), CCTV காட்சிகள், தொலைபேசி அழைப்புகள், GPS தரவுகளின் அடிப்படையில் சுவிஸ் தூதரகம் சிஐடிக்கு வழங்கிய தகவல்களுடன் ஒன்றுக்கொன்று முரணானதாக காணப்படுவதாக அரசாங்க பிரதிநிதிகள் தூதரகத்திற்கு சாட்சியங்களுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும், மறுக்கமுடியாத ஆதாரங்களின்படி குற்றச்சாட்டின் உண்மையான தன்மையை தீர்மானிக்க, மேலதிக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என, சட்ட அமுலாக்க அதிகாரிகள் சுவிஸ் தூதரகத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதற்காக இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஊழியரை சட்ட அமுலாக்க அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

கடத்தல் குற்றச்சாட்டில் அவர் காயமடைந்ததாகக் கூறப்பட்டதால், அவரை இலங்கையில் உள்ள சட்ட மருத்துவ அதிகாரி மூலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் என்று வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தின் நிலையை தீர்மானிக்க இலங்கை அரசுக்கு உதவுமாறு வெளியுறவு அமைச்சு சுவிட்சர்லாந்து தூதரகத்திடம் இதன் மூலம் கோரிக்கையொன்றையும் விடுத்துள்ளது.

No comments:

Post a Comment