சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் நான்கு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை திருக்கடலூர் மற்றும் கஸ்தூரி நகர், பள்ளத்தோட்டம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 21, 23, 41 மற்றும் 51 வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மாத்தறை - தெவுந்தர பகுதியில் கடந்த 15 ஆம் திகதி டெங்கி போட் ஒன்றினை திருகோணமலை மற்றும் கிண்ணியா பகுதிகளைச் சேர்ந்த இருவர் தமது பெயருக்கு வாங்கி படகினை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாலச்சேனை பகுதிக்கு கொண்டு சென்று அங்கு அந்த டெங்கி படகினை நிறுத்திவிட்டு மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 50 இக்கும் மேற்பட்டவர்களை கடந்த 25ஆம் திகதி பிரான்ஸ் நாட்டின் ரிவினிய் தீவுக்கு ஏற்றிச்சென்ற வேளை சர்வதேச கடலில் டெங்கி போட்டின் லைட் பழுதடைந்துள்ளது.
இதனையடுத்து மீண்டும் அப்படகு இயந்திரக் கோளாறு காரணமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள பானம எனும் கடற்கரை காட்டுப்பகுதிக்கு சென்றடைந்துள்ளது. இந்நிலையில் அதில் சென்ற 50 இக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.
இதேவேளை கடற்படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட போது திருகோணமலை பகுதியைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment