பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரியாக (Chief of Defence Staff) இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை 2020 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி என்ற வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதுவரை காலம் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக சேவையாற்றி வந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவி காலம் இன்றுடன் (31) முடிவடைந்து சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்வதைதை தொடர்ந்து ஏற்படும் வெற்றிடத்திற்கே லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவத் தளபதி பதவிக்கு மேலதிகமாக பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
1980ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 01ஆம் திகதி இலங்கை கடற்படையில் கெடெட் அதிகாரியாக இணைந்து தாய் நாட்டிற்காக சேவையாற்றிய அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, கடற்படையின் பல்வேறு உயர் பதவிகளை வகித்து வந்த நிலையில் 2015ஆம் ஆண்டு ஜுலை மாதம் 11ஆம் திகதி இலங்கை கடற்படையின் 20ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சுமார் இரண்டரை வருடகாலமாக குறித்த பதவியில் சேவையாற்றி வந்த நிலையிலேயே அவர் இன்றுடன் (31) ஓய்வு பெற்றுச் செல்கிறார். இலங்கை பாதுகாப்பு படைகளின் வரலாற்றில் தொடர்ச்சியாக 39ஆண்டுகள் சேவையாற்றிய முதலாவது உயர் அதிகாரி இவராவார்.
இதேவேளை, ஓய்வு பெற்றுச் சென்ற அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு இன்று (31) முப்படைகளின் விஷேட மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இராணுவ, கடற்படை, விமானப் படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
(ஸாதிக் ஷிஹான்)
No comments:
Post a Comment