சுவிஸ் தூதரக அதிகாரிக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத்தடை நீடிப்பு - நாளை 4ஆவது நாளாக CIDயில் முன்னிலையாக உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Thursday, December 12, 2019

சுவிஸ் தூதரக அதிகாரிக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத்தடை நீடிப்பு - நாளை 4ஆவது நாளாக CIDயில் முன்னிலையாக உத்தரவு

கொழும்பில் தடுத்து வைத்து அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியான கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸிற்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சுவிஸ் தூதரக அதிகாரிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடித்து பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை என தெரிவித்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், நாளைய தினமும் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

இந்த விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதவான் கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸிற்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.

கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸ் நோய்வாய்ப்பட்டுள்ளமையால் அடுத்தகட்ட வாக்குமூல பதிவை கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து உயர்ஸ்தானிகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் மேற்கொள்ள உத்தரவிடுமாறு பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும கோரிக்கை விடுத்தார்.

எனினும், சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார, இந்த கோரிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்தமையால் பிரதம நீதவான் கோரிக்கையை நிராகரித்தார்.

சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியான கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸின் மனோநிலை தொடர்பில் உளநல நிபுணர்கள் குழுவாக ஆராய்வது மிகவும் சிறந்ததாக அமையும் என சட்ட மருத்துவ அதிகாரி மன்றுக்கு அறிவித்துள்ளார்.

அதற்கமைய, விசேட உளநல மருத்துவர்கள் குழு முன்னிலையில் கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸை ஆஜர்படுத்துமாறு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியான கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸ் சார்பில் மன்றில் ஆஜராகியுள்ள தமக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார்.

இதற்கமைய, அச்சுறுத்தல்கள், தகவல் திரிவுபடுத்தல், ஊடகவியலாளர் சந்திப்புகளில் வௌியிடப்படும் அறிவித்தல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 25 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இச்சம்பவத்தை தொடர்ந்து, கடந்த டிசம்பர் 03 ஆம் திகதி அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. டிசம்பர் 09 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்ட குறித்த தடையுத்தரவு, பின்னர் டிசம்பர் 12 (இன்று) வரை நீட்டிக்கப்பட்டது.

No comments:

Post a Comment