ஜனாதிபதி தேர்தல் ஓட்ட பந்தயத்தில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் களமிறக்கப்பட்டுள்ள பலமிக்கதும், இளமை துடிப்பும் உள்ள சஜித் பிரேமதாச என்ற குதிரை வெற்றிபெறும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று மாலை (31) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மனோ கணேசன், வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் சஜித் பிரேமதாச என்ற புத்தி சாதுரியமிக்க, நம்பிக்கைமிகு குதிரையை நம்பி பந்தயத்திற்கான பணத்தை செலுத்தி அவர் வெற்றி பெற்றதன் பின்னர் அதன் பலாபலன்களை அனுபவிக்க முடியும் எனவும் கூறினார்.
ஆனால் எதிர்தரப்பில் ஒரு வயதான நோய்வாய்பட்ட குதிரை ஒன்று களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் விரீயமாக ஓடி வெற்றி பெற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் இரு குதிரைகளினதும் ஆளுமைகளையும், திறன்களையும் வேறுப்படுத்தி சரியான ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஆட்சியில் போன்று வெள்ளை வேன் கலாசாரம் மீண்டும் தலைத்தூக்க இடமளிக்க கூடாது எனவும் அதற்காக சமூக உணர்வோடு சிந்தித்து வெல்லக்கூடிய குதிரையான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக தெரிவுச் செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு தீர்மானிக்கும் சக்தியை கொண்டிருக்கின்றதோ அதேபோல் தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக மக்களின் அரணாக இருந்து அவர்களுக்கு சேவையாற்றுவதாகவும் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
சமூக சிந்தனையோடும், அக்கறையுடனும் செயற்பட்டு வரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களை எவரும் சுயநலவாதிகள் அல்லது சமூகத்தை காட்டி கொடுத்தவர்கள் என குற்றம் சுமத்த முடியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment