ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பகிரங்க விவாத்திற்கு நான் தயார் - என்னுடனான பகிரங்க விவாதத்திற்கு நீங்கள் தயாரா? இதை உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியுமா? - News View

About Us

About Us

Breaking

Saturday, November 2, 2019

ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பகிரங்க விவாத்திற்கு நான் தயார் - என்னுடனான பகிரங்க விவாதத்திற்கு நீங்கள் தயாரா? இதை உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியுமா?

தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? ஏன் உங்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று பகிரங்க விவாதத்திற்கு என்னுடன் வரமுடியுமா? என்று ஜனாதிபதி வேட்பாளர்கள் முக்கியமாக சஜித் பிரேமதாச, கோத்தாபய ராஜபக்ஸ மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருடன் பகிரங்க விவாத்திற்கு நான் தயார் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே சிவாஜிலிங்கம் பகிரங்க சவாலை ஊடகங்கள் மூலமாக அறிவித்துள்ளார்.

நேற்று மாலை மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வொய்ஸ் ஒவ் மீடியா ஊடக வளங்கல் மற்றும் ஆய்வுகளுக்கான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் மொழியிலும் சிங்கள மொழியிலும் அவர் இவ் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த ஜனாதிபதித் தேர்தல் காளத்திலே இன்னொரு புது புதுமையான விடயம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சஜித் பிரேமதாச அவர்கள் கோத்தபாய ராஜபக்சவை பகிரங்க விவாதத்திற்கு வாருங்கள் என்று கேட்கிறார். இப்பொழுது நாமல் ராஜபக்ஸ சொல்லியிருக்கிறார். நான் வருகின்றேன் என்று. நான் ஊடகங்கள் வாயிலாக இப்பொழுது சவால் விடுகின்றேன் மூவருக்கும்.

தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? ஏன் உங்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று பகிரங்க விவாதத்திற்கு என்னுடன் வரமுடியுமா? வடக்கு கிழக்கிலே எங்காவது சிங்கள மொழியில்லை. சரி வடக்கு கிழக்கிலே உங்களுக்கு வருவதற்கு கஸ்டமிருந்தால் கொழும்பிலோ, அல்லது சஜித் பிரேமதாசாவினுடைய இடத்திலோ அல்லது கோத்தபாய ராஜபக்ஸவினுடைய ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலோ, நான் வருவதற்கு தயாராகவிருக்கின்றேன். அதேபோல அனுரகுமார திஸாநாயக்க சொல்லட்டும். எந்த சிங்கள ஊருக்கு வரவேண்டுமோ நான் பொது மேடைக்கு வரத்தயார். சிங்கள மொழியிலே பகிரங்க விவாதத்திற்கு சவால் விடுகின்றேன். நீங்கள் வாருங்கள் அப்பொழுது எங்களுடைய தமிழ் மக்களுக்குத் தெரியட்டும்.

நாங்கள் தமிழ் மக்களுடைய வாக்குகளைப்பிரிப்பதற்காகவா போராடுகின்றோம். அல்லது. தமிழ் மக்களுக்கான நீதியைக் கோரியா போராடுகின்றோம் என்பதை தெரிந்து கொள்ளட்டும். என்னிலே பிழையிருந்தால் என்னை அம்பலப்படுத்துங்கள். தோற்கடியுங்கள். நான் சவால் விடுகின்றேன். மூன்று பேரும் ஒரே இடத்தில் வரமுடியாதென்றால் சொல்லுங்கள். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட இடத்திற்கும் நான் வருகின்றேன். 

தொலைக்காட்சிகள் பார்த்து நிற்கட்டும். என்னுடனான இந்த பகிரங்க விவாதத்திற்கு நீங்கள் தயாரா? இதை உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியுமா? என்று உங்களைக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் முடியுமென்றால் அந்த இடத்திற்கு வருவதற்கு நான் எப்போதும் ஆயத்தமாகவுள்ளேன். இந்த சவாலை ஊடகங்கள் வாயிலாக சவாலாக விடுகின்றேன் என்றார் அவர்.

எப்படியும் பெரும்பான்மையான இரண்டு கட்சிகளில் ஒருவரே ஜனாதிபதியாகும் நிலையில். இந்த தேர்தலின் முடிவின் பின்னர் உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்.

இந்த வேட்பாளருடைய எண்ணிக்கை 25 இற்கு குறைவாக இருந்தால் அவருடைய மனநிலை எவ்வாறு இருக்குமென்று எண்ணிப்பார்க்க வேண்டும். எதுவும் நடக்கலாம். அதுவல்ல பிரச்சினை. ஆனால் அவர்கள் மூவருக்கும் ஈரல் கருகுகின்ற அளவுக்கு எங்களுடைய செயற்பாடுகள் அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளது. நான் என்னுடைய தேர்தல் அறிக்கையிலே, தமிழர்களுடைய பிரகடனமாக பிரகடனப்படுத்தப்படபோகின்ற அறிக்கையிலே ஒரு முக்கியமான செய்தியை சொல்லியுள்ளேன்.

மூன்று மாதங்களுக்குள்ளே புதிய ஜனாதிபதியாகி வருகின்றவர். ஒருவேளை சஜித்தாக இருக்கலாம் அல்லது கோத்தபாயவாக இருக்கலாம். ஒரு அரசியல் தீர்வுக்கான திட்டத்தை அவர் ஆரம்பிக்கத் தவறுமிடத்து நாங்கள் சர்வதேச ரீதியாக ஐக்கிய நாடுகள் சபை மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி என்ற அடிப்படையிலே நாங்கள் வடக்கு கிழக்கு பிராந்தியத்திலே ஒரு பொதுசன வாக்கெடுப்பைக் கோருவோம் என்பதை இந்த தேர்தல் மூலம் வெளிப்படுத்தி நிற்கின்றோம்.

அடுத்தது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்று நீதியை நிலைநாட்டுவது. இடையிலே நீங்கள் தருவதாக இருந்தால் நாங்கள் அதைக் குழப்பவில்லை. நாங்கள் ஆதரவு வழங்குவோம். ஆனால் ஏழு தடைவை ஏமாற்றப்பட்டு போன நாங்கள் எட்டாவது தடவையும் ஏமாற்றப்பட்டு போனதாக இருக்கக் கூடாது. 

தமிழ் மக்களை ஏமாற்றிய கடைசித் தலைவர்களாக மைத்திரிபாலசிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும்தான் இருக்கவேண்டுமே ஒழிய பின்னர் சஜித் ஏமாற்றி விட்டார் கோத்தா ஏமாற்றி விட்டார் என்ற நிலைமைக்கே இடமில்லை. நீங்கள் ஏமாற்றத் தேவையில்லை. நீங்கள் தரமாட்டீர்கள் என்றுதான் நாம் முடிவெடுத்திருக்கின்றோம் என்ற வகையிலே எங்களுடைய பயணம் தொடர வேண்டும் என்பதுதான் எனது அன்பான பணிவான வேண்டுகோள் என்றார் அவர்.

(மட்டக்களப்பு நிருபர்கள் கிருஷ்ணகுமார், சரவணன்)

No comments:

Post a Comment