தேர்தல் மேடைகள் மிக நாகரீகமாக அமையவேண்டும் - சியாத் ஆசிரியரின் உரையை கண்டித்து காத்தான்குடி சம்மேளனம் அறிக்கை வெளியிட்டுள்ளது - News View

About Us

About Us

Breaking

Saturday, November 2, 2019

தேர்தல் மேடைகள் மிக நாகரீகமாக அமையவேண்டும் - சியாத் ஆசிரியரின் உரையை கண்டித்து காத்தான்குடி சம்மேளனம் அறிக்கை வெளியிட்டுள்ளது

(எம்.பஹ்த் ஜுனைட்)
கடந்த வெள்ளிக்கிழமை (2019.11.01) சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சார மேடையில் உரையாற்றிய சியாத் ஆசிரியர் காத்தான்குடியையும் காத்தான்குடி மக்களையும் மிகக்கேவலமான வார்த்தைகளால் விமர்சித்ததை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது தேர்தல் மேடை என்பது மற்றவர்களது மானத்தை பாதுகாப்பதாகவும் ஏனைய சமூகத்தினருக்கு முன்மாதிரியாகவும் அமைய வேண்டுமே தவிர, ஒரே சமூகத்திற்குள் இருக்கும் ஏனையவர்களையோ அல்லது அவர்களது ஊர்களையோ கேவலப்படுத்துவதாக அமையக்கூடாது. 

ஒரு சில பிழையான விடயங்களுக்காக ஒட்டுமொத்த ஊரையும், அங்கு வாழும் மக்களையும் பொது வெளியில் பிழையாக விமர்சிப்பது படித்தவர்களின் பண்பல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பொறுப்பு வாய்ந்த உலமாக்கள் புத்திஜீவிகள் நிறைந்த சாய்ந்தமருது பிரதேசத்தில் இவ்வாறான வேதனைக்குரிய உரை நிகழ்த்தப்பட்டிருப்பது எமது சமூகத்திற்கு எதிர்காலத்தில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் எந்த நேரத்தில் எந்த இடத்தில் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக முன்னின்று குரல் கொடுப்பதிலும் உதவி செய்வதிலும் காத்தான்குடி மக்கள் ஒரு போதும் தயங்கியதில்லை என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இன்று சர்வதேச ரீதியில் காத்தான்குடியானது முன்மாதிரியாக பேசப்படக்கூடிய ஊராக இருப்பதற்கு காத்தான்குடி மக்களின் அர்ப்பணிப்பான பல சேவைகளே காரணம் என்பதை அனைவரும் அறிவர்.

எனவே, தேர்தல் காலங்களில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்ற அரசியல்வாதிகள், பிரச்சாரகர்கள் அனைவரும் பொறுப்புணர்வோடும் நிதானத்தோடும் நடந்து கொள்ள வேண்டுமென காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அனைவரையும் வினயமாக கேட்டுக் கொள்வதாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment