வட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விடக்கூடாது - சந்திரிகாவின் ஆதரவும் சஜித்திற்கே - News View

About Us

About Us

Breaking

Thursday, October 31, 2019

வட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விடக்கூடாது - சந்திரிகாவின் ஆதரவும் சஜித்திற்கே

வட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை அவர்கள் புறக்கணித்ததால் தமிழர்கள் பாரிய இழப்புகளையும் பல்வேறு துன்பத்திற்கும் உள்ளானார்கள். எனவே இந்த தேர்தலை சிந்தித்து அவர்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கக்கூடிய கீழ்மட்ட மக்களின் வாழ்க்கையை நன்கு உணர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பதற்கு முன்வர வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் வேண்டுக்கோள் ஒன்றை விடுத்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியன ஏற்பாடு செய்த தேர்தல் கலந்துரையாடலின் பின்பு அட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த காலங்களில் வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த வேலை நிறுத்தம் திட்டமிட்ட அடிப்படையில் அரசியல் நோக்கத்தை கொண்டதாக இருந்திருக்கின்றது. அதற்கு சிறந்த உதாரணம் அரச மருத்துவ சங்கத்தின் உறுப்பினர்கள் கோட்டபாய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு மேடையில் வீற்றிருந்தது. இது ஒரு அரசியல் போராட்டம் என்பதை உணர முடிகின்றது.

மக்களின் உயிர்களை பணயம் வைத்து இவ்வாறு நடந்து கொள்வது உண்மையான போராட்டங்களை இழிவுப்படுத்தும் ஒரு செயலாகவே கருத வேண்டியிருக்கின்றது. எனவே இதனை பொதுமக்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் கீழ்மட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை புரிந்துகொள்ளக்கூடிய ஒரு ஜனாதிபதி உருவாகவில்லை என்றே கூற வேண்டும்.

அந்த அடிப்படையில் நீண்ட காலத்திற்கு பின்பு ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிடுவது ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு உட்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி வெற்றியின் விளிம்பில் இருக்கும் இந்த நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கினால் சஜித் வெற்றி உறுதி செய்யப்படும். அந்த முடிவும் வெகுவிரைவில் வெளிவரும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

மலையக இளைஞர்கள் யுவதிகளுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு வெளிமாவட்டங்களில் தொழில் புரிகின்றவர்களுக்கு தங்களுடைய இடங்களுக்கு சென்று வாக்களிப்பதற்கு தேவையான விடுமுறைகளை பெற்றுக்கொடுக்க தேர்தல் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் அவரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment