தேர்தல் காலத்திலாவது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கரிசனையும் அக்கறையும் வந்துள்ளமையை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி வெறுமனமே ஒரு சமிக்ஞையாக அல்லாமல் எங்கள் அரசியலில் சிந்தனை மாற்றமாக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
யாழ். மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் யாழ்.மாநகர சபைக்கான புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நேற்று (சனிக்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடக்கு ஆளுநர் உட்பட்டோரின் பங்குபற்றுதலுடன் நாட்டி வைக்கப்பட்டது. இதன் பின்ன்ர உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “யாழ்.மாநகர சபை எமது அண்மைக்கால வரலாற்றில் மறக்க முடியாத முக்கிய இடமாகும். இதன் வரலாறு சிலநேரம் கண்ணீராலும் சில நேரங்களில் இரத்தத்தாலும் எழுதிச் சென்றுள்ளது என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
ஆகையால் இந்த புதிய கட்டடம் உருவாக்கப்படுவது சில வேளைகளில் எங்களது அரசியலிலும் சமூகத்திலும் ஒரு புதிய திசைமாற்றத்தை ஏற்படுத்தலாம். சுதந்திரம் கிடைக்கப்பெற்று ஒரு வருடத்தில் இந்த மாநகர சபை உருவாக்கப்பட்டு இயங்கியதாக கூறப்படுகின்றது.
அந்த காலத்திலிருந்த அரசியல், வன்முறையாக மாறிய நாள் கூட இந்த மாநகர சபையின் படுகொலை நாளில் தான் எழுதப்பட்டது என்பதை ஞாபகப்படுத்துகின்றேன். வரலாறு மிகவும் முக்கியம் அதில் நாம் பாடம் படிக்கின்றோம்.
வரலாற்றினை விட இனிமேல் வரப்போகின்றவர்கள் மக்களுக்கு என்ன சேவை செய்யப் போகின்றார்கள் என்பதில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டுமென நினைக்கின்றேன். தேர்தல் காலத்திலாவது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கரிசனையும் அக்கறையும் வந்துள்ளமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
வெறுமனமே ஒரு சமிக்ஞையாக அல்லாமல் எங்கள் அரசியலில் சிந்தனை மாற்றமாக இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். இந்த மாநகர சபை ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் கேந்திர நிலையமாக இருக்க வேண்டும். கட்டடத்தை யார் வேண்டுமானாலும் கட்டலாம். ஆனால் ஜனநாயகத்தை பல சவால்களுக்கு மத்தியில் கட்டியெழுப்ப வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment