மத்திய கலாசார நிதியத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பில் ஆராய பிரதமர் எந்த ஒரு குழுவையும் நியமிக்கவில்லை. இங்கு எந்த நிதி முறைகேடும் இடம்பெறவில்லை என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பத்திரிகையொன்றில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தி பாராளுமன்றத்தின் பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பதாகவும் அவர் கூறினார்.
மத்திய கலாச்சார நிதியம் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த விவாதத்தில் உரையாற்றிய ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் முறைப்பாட்டிற்கமைய பிரதமர் குழு அமைத்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியின் பிரகாரமே இந்த விவாதம் நடைபெறுகிறது. பிரதமர் அவ்வாறு குழு அமைத்துள்ளாரா என கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதலளித்த அமைச்சர், எந்த ஒரு குழுவும் பிரதமர் உருவாக்கவில்லை. கோப் குழுவிலோ கணக்குக் குழுவிலோ இது பற்றி ஆராயப்படவில்லை என்றார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிமல் ரத்னாயக்க எம்.பி, இவ்வாறான குற்றச்சாட்டை அரசாங்க தரப்பில் இருந்து தான் முதலில் நிராகரித்திருக்க வேண்டும். 30 வருடத்திற்கு மேலாக மத்திய கலாசார நிதியம் தமக்குரிய பணியை அன்றி வேறு பணியே செய்துவந்துள்ளது.
இந்த நிதி பயன்படுத்தியது குறித்து முழுமையான கணக்காய்வு மேற்கொள்ள வேண்டும். பிணைமுறி முக்கிய சந்தேக நபரே இந்த மத்திய கலாசார நிதிய முறைகேடுபற்றி கூறியிருந்தார் என்றார்.
ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment