நேற்றிரவு (06.09.2019) மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பதுரியா - மாஞ்சோலைக் கிராம எல்லைப் பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக தமிழர் தரப்பினரின் கல்லெறித் தாக்குதலில் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ், முஸ்லிம் எல்லைப் பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலையே காணப்படுகின்றது.
சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் உடனடியாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மிக நீண்ட காலமாக இருந்து வரும் காணிப் பிரச்சினையே நேற்றைய சம்பவத்திற்கு காரணம் என்பதுடன், முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை அத்துமீறி நுழைந்து உரிமை கொண்டாடுவதுடன், முஸ்லிம்களால் தமது காணியின் பாதுகாப்புக்கென அமைக்கப்பட்டுள்ள வேலிகளை சேதப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த பிரதேசத்தில் முஸ்லிம்கள் பரம்பரையாக வாழ்ந்து வருவதுடன், அதற்கான வலுவான ஆதாரங்களும் உள்ள நிலையில் தமிழர் தரப்பினால் குறித்த எல்லைப் பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இப்பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், முஸ்லிம்களின் காணிகளின் வேலிகளும் சேதப்படுத்தப்பட்டன.
இதனை சாதகமாகப்படுத்திக் கொண்ட அரசியல்வாதிகள் இரு இனங்களையும் மோத விடும் கைங்கரியத்தை மிகவும் இலாவகமாகச் செய்து வருவதுடன், தமது சரிந்து போன செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள இவ்வாறான வேண்டத்தகாத செயற்பாடுகளைத் தூண்டி விடுகின்றனர்.
இது விடயத்தில், அரசியல்வாதிகள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைத் தவிசாளர், அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தீர்க்கமான முடிவொன்றுக்கு வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இப்பிரச்சினை தொடருமாக இருந்தால் இப்பிரதேசத்தில் வதியும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் பகையுணர்வு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இது விடயத்தில் சகலரும் ஒன்றித்து தீர்வினைக் காண முன்வர வேண்டும். அத்துடன், முஸ்லிம்களின் காணிகளை அபகரித்து தமிழர் தரப்பு உரிமை கொண்டாட அனுமதிக்க முடியாது.
அத்தோடு, தொடர்ந்தேர்ச்சியாக இடம்பெற்று வரும் இவ்வாறான அத்துமீறல், அநியாயங்களின் போது எமது பிரதேச முஸ்லிம் அரசியல் தலைமைகள் மெளனம் காப்பதாக பாதிக்கப்படட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
thehotline.lk
No comments:
Post a Comment