யாழில் என்டர்பிரைஸ் ஸ்ரீங்கா கண்காட்சி : ரணில் மாத்திரமே பங்கேற்பு, பயணத்தை நிறுத்தினார் மைத்திரி - News View

About Us

About Us

Breaking

Friday, September 6, 2019

யாழில் என்டர்பிரைஸ் ஸ்ரீங்கா கண்காட்சி : ரணில் மாத்திரமே பங்கேற்பு, பயணத்தை நிறுத்தினார் மைத்திரி

நிதி அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. சுமார் 6 கோடி ரூபா செலவில், யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரமாண்ட கண்காட்சியைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் இறுதி நேரத்தில், அவர் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பமாகும் கண்காட்சி எதிர்வரும் 10ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறும். நாளையிலிருந்து காலை முதல் இரவு வரை கண்காட்சி இடம்பெறும்.

தொழில் முயற்சியாளர்கள் 10 இலட்சம் பேரை உருவாக்கும் நோக்கில், நிதி அமைச்சால் நடத்தப்பட்டு வரும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி, கருத்திட்டத்தின் மூன்றாவது தேசிய நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகின்றது. வடக்கில் பிரதான மாவட்டமான யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இந்தக் கண்காட்சி நடத்தப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு இந்தக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளது. அதற்கான தெளிவுபடுத்தல், அனுபவப் பகிர்வு உள்ளிட்ட விழிப்புணர்வுகள் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்காட்சிக்காக யாழ்ப்பாணம் கோட்டையின் வடக்குப் பக்கமாக உள்ள நிலப்பரப்பு முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதற்காக முனியப்பர் கோயில் தொடக்கம் முற்றவெளி ஊடாக பண்ணை வீதி வரை கிரவல் பாதை அமைக்கப்பட்டு பிரமாண்டமாக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்காக சுமார் 6 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Charles Ariyakumar Jaseeharan

No comments:

Post a Comment