வடக்கில் உள்ள சுகாதாரத் தொண்டர்கள் நியமனத்திற்காக மீண்டும் 3 வாரத்துக்குள் நேர்முகத் தேர்வு இடம்பெறவுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்போது அவர் தெரிவிக்கையில், “வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களின் பிரதிநிதிகளுடன் இன்று நீண்ட நேர சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் சில இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
நாம் சுகாதார தொண்டர்கள் நியமனத்தினால் குழப்பங்கள் ஏற்படக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம். அதற்காக வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுகாதார தொண்டர்களின் பிரதிநிதிகளை சந்தித்தேன். அதில் நேர்முகத் தேர்வுகளில் சில பிழைகள் இடம்பெற்றுள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களுக்கான நேர்முகத் தேர்வுக்கு மூன்று பேர் கொண்ட 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு 40 பேருக்கு நேர்முகத் தேர்வு இடம்பெறும். இந்த குழுக்களின் நேர்முகத் தேர்வு சரியாக நடைபெறுகின்றதா? என்பதை கண்காணிக்க பார்வையாளர்களாக சிலர் நியமிக்கப்படவுள்ளனர்.
சுகாதார தொண்டர்கள் நேர்முகத் தேர்வில் பலருக்கு கா.பொ.த. சாதாரண தரம் இல்லாமையினால் தரம் 8 சித்தியடைந்திருந்தால் போதும் என கோரப்பட்டுள்ளன” என்றார்.
No comments:
Post a Comment