ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர இன்று மாலை காலமானார்.
தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார். 1946ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் திகதி பிறந்த இவர், கம்யூனிஷ் கட்சியூடாக அரசியலில் பிரவேசித்தவர்.
1994ஆம் ஆண்டு முதல் இவர் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி வருவதுடன், பிரதி அமைச்சராகவும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும் பல சந்தர்ப்பங்களில் இவர் பதவி வகித்துள்ளார்.
இறுதியாக 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டுவரை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளராக அவர் தொடர்ந்தும் பாராளுமன்றில் செயற்பட்டு வந்தார். இறுதி கிரியைகள் தொடர்பில் நாளைய தினம் அறிவிக்கப்படவுள்ளது.
இவர் காலமானதை அடுத்த அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளது. எனவே, மாத்தறை மாவட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இவருக்கு அடுத்தாக லக்ஷமன் யாபா அபேவர்தன இருப்பினும், அவர் தற்போது தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்தில் உள்ளார்.
இதனால் அவருக்கு அடுத்து உள்ள மனோஜ் சிறிசேனவிற்கு பாராளுமன்றத்திற்கு தெரிவாவதற்கான வாய்ப்பு உள்ளதுடன் இது தொடர்பில் அவரது நிலைப்பாடு என்னவென தெரியவில்லை.
No comments:
Post a Comment