தமது கைகளிலுள்ள ஆயுதத்தை முஸ்லிம்கள் பக்குவமாகப் பாவிப்பதற்குத் தயாராக வேண்டும்! - முன்னாள் முதலமைச்சர் நஸிர் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2019

தமது கைகளிலுள்ள ஆயுதத்தை முஸ்லிம்கள் பக்குவமாகப் பாவிப்பதற்குத் தயாராக வேண்டும்! - முன்னாள் முதலமைச்சர் நஸிர் அஹமட்

‘முஸ்லிம்கள் தமது கைகளிலுள்ள ஆயுதத்ததை மிகவும் பக்குவமாக பாவித்தாக வேண்டும். எதுவித ஆதாரமுமின்றி முஸ்லிம்கள் என்ற காரணத்துக்காக வேண்டும் மென்றே பிரச்சினைகளை தோற்றிவிக்கின்ற செயற்பாடுகள் தொடர்ந்தும் அரங்கேறி வருகின்ற நிலையில் முஸ்லிம்கள் தமது வாக்குரிமை என்ற ஆயுதத்தை மிகவும் கவனமாகப் பாவிக்கவேண்டும்.’

இவ்வாறு தெரிவிக்கின்றார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸிர் அஹமட். ஜனாதிபதித் தேர்தல்கள் கள நிலைமைகள் குறித்து அவர் கருத்துரைத்தபோதே இதனைத் தெரிவித்தார்.

இவர் தொடர்ந்து கூறியதாவது எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்கள் தெரிவும் கள இறங்களும் கருத்தோட்டங்களும் நம்மை கிலியடையச் செய்கின்றன. 

சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ள எடுக்கப்படும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்றுவரும் அதேவேளை அவ்வாறு கிடைக்கப் பெறாத பட்சத்தில் சிங்களப் பெருபான்மைச் சமூகத்தின் மிகக் கூடுதலான ஆதரவைப் பெறுவது தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது.

இதன் காரணமாகச் சிறுபான்மை மக்கள் பற்றிய தவறான பரப்புரைகள் மேற்கொள்ளப்படும் ஆபத்தும் எழுந்துள்ளது. குறிப்பாக முஸ்லிம்களின் சமூக அரசியல் மதத் தலைவர்களை மையப்படுத்தி உண்மைக்கு மாறான கருத்து பகிர்வுகளை சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் விதைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய பரப்புரைகளுக்கு உந்துகோலாகப் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த சில ஊடகச் சக்திகளும் செயற்படுகின்றன. இவை நாட்டின் தேர்தல் ஓழங்கு விதி முறைகளை மீறும் விதமாக அமையப் பெற்றால் தேர்தலுக்குப் பொறுப்பான சுயாதீன ஆணைக்குழு ஊடாக நாம் நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது.

நாட்டின் இறைமைக்கும் ஐக்கியத்துக்கும் சமாதானத்துக்கும் மற்றும் நல்லிணக்கத்துக்கும் இத்தகைய நடைமுறைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இதுமட்டுமின்றி சிறுபான்மை மக்களின் அரசியல் மற்றும் வாழ்வாதார நிலைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இவ்வாறான நிலைமைகள் உருவாக நாம் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.

தற்போதைய நிலையில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது வாக்காயுதத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் நன்கு சிந்தித்துச் செயற்படுத்துபவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. எமது சமூகத்தின் எதிர்கால இருப்பையும் வனப்பையும் மனதில் கொண்டு நாம் காத்திரமான முடிவோடு எமது ஆதரவை வழங்க முன்வர வேண்டும்.

இது விடயத்தில் நமது அரசியல் சமூக மத சக்திகள் ஒன்றிணைந்து காத்திரமான முடிவென்றை முன்வைத்து சமூகத்தைச் சிறந்த பாதையில் வழிநடத்த முன்வர வேண்டும். இத்தகைய நடைமுறைக்கு ஆதரவளித்து எமது ஐக்கியத்தையும் ஒற்றமையையும் கடைக்கொள்ள எமது மக்கள் தயாராக வேண்டும். – என்றார்.

No comments:

Post a Comment