70 வருட காலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்த அரசாங்கத்திலும் தீர்வு கிடைக்கவில்லை - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 20, 2019

70 வருட காலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்த அரசாங்கத்திலும் தீர்வு கிடைக்கவில்லை

இலங்கை வரலாற்றில் கடந்த காலங்களில் இருந்த எல்லா அரசாங்கங்களும் தமிழ் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியதே தவிர இதுவரை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக சரித்திரம் இல்லை என மலையக மக்கள் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் நேற்றுமுன்தினம் காலை டிக்கோயா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு உலக சைவ திருச்சபையின் ஏற்பாட்டில் சிவலிங்க சிலை வழங்கி வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த நாட்டின் வரலாற்றில் கடந்த 70 வருட காலமாக மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான உறுதியான ஒரு தீர்வினை பெற்றுக் கொடுத்ததாக சரித்திரம் இல்லை.

ஆகவே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நினைத்து வாக்களிப்பதை விட இந்த நாட்டில் ஒரு அரசாங்கம் வர வேண்டும் என நினைத்து தான் வாக்களிக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 

அதில் ஓரளவு தமிழ் மக்களை நிம்மதியாக வாழ வைக்க கூடிய ஒரு அரசாங்கத்தை நாம் தெரிவு செய்ய வேண்டும். அதில் ஜனாதிபதி வேட்பாளர்கள் வருகையை வைத்து தான் தெரிவு செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கையை நாம் முன்னெடுக்க வேண்டும். 

நாம் அதிகளவில் அபிவிருத்திகளை மேற்கொள்வதன் காரணமாக தான் விமர்சனங்கள் வருகின்றன. அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளாமல் இருந்தால் எந்த விமரசனங்களும் வராது. விமர்சனங்களை நாம் எப்போதும் வரவேற்கின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் உலக சைவ திருச்சபையின் தலைவரும், கனடா பெரிய சிவன் ஆலயத்தின் ஸ்தாபகருமான அடியார் விபுலானந்தா மற்றும் பாடசாலை அதிபர் என பலரும் கலந்து கொண்டனர்.

ஹற்றன் சுழற்சி நிருபர்

No comments:

Post a Comment