மக்கள் வங்கியின் சட்டத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படுவது அதனை தனியார் மயப்படுத்துவதற்காகவல்ல. மக்கள் வங்கியின் மூலதனத்தை ஒரு பில்லியனிலிருந்து 50 பில்லியன்களாக மாற்றுவதற்கும், கடன் பத்திரங்களை திறைசேரியின் அனுமதியின்றி விநியோகிக்கவுமாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்தார்.
மக்கள் வங்கி சட்டத்தின் 13ஆவது சரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே அதை அரசுடமையிலிருந்து மாற்ற முடியும். ஆகவே, அச் சரத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
நிதி அமைச்சில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
மக்கள் வங்கி தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தச் சட்டம் அடுத்த வாரம் பாராளுமன்றில் நிறைவேற்றப்படவுள்ளது. மக்கள் வங்கியை தனியார்மயப்படுத்தப் போவதாக சிலர் ஊடகங்களில் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர்.
மக்கள் வங்கியின் 13ஆவது சரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே அது அரசுடமையிலிருந்து மாற்றங்காணும். நாம் அச்சரத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளவில்லை. மாறாக மக்கள் வங்கியின் மூலனத்தை அதிகரிக்கும் முயற்சியையே எடுத்துள்ளோம்.
மக்கள் வங்கியின் மூலதனம் தற்போது ஒரு பில்லியன் வரையே காணப்படுகிறது. இலங்கை வங்கியின் மூதலனம் 50பில்லியனாக உள்ளது. ஆகவே, மக்கள் வங்கியின் மூலதனத்தை 50பில்லியனாக உயர்த்தவே சட்டத் திருத்தத்தை மேற்கொண்டுள்ளோம்.
அதேபோன்று மக்கள் வங்கியால் திறைசேரியின் அனுமதியின்றி கடன் பத்திரங்களை வெளியிட முடியாது. இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி உள்ளிட்ட பல வங்கிகளுக்கு கடன் பத்திரங்களை தானாக வெளியிடக் கூடிய அதிகாரம் உள்ளது. மக்கள் வங்கிக்கும் அந்த அதிகாரத்தை வழங்குவதன் மூலம் மக்களுக்கு மேலும் நன்மைகளை பெற்றுக்கொடுக்க முடியும்.
2014ஆம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்டிருந்த அறிக்கையிலும், மக்கள் வங்கியின் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இந்த விடயம் வலியுறுத்தப்பட்டு வந்ததன் அடிப்படையிலேயே தற்போது அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment