தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க தயாசிறி எம்.பி. கடும் நிபந்தனை - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 2, 2019

தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க தயாசிறி எம்.பி. கடும் நிபந்தனை

"சபாநாயகர் கரு ஜயசூரிய தனது நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக அறிவிப்பாராயின், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிப்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்."

இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது "நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணையின் மூலம் வெளியாகும் தகவல்களானவை நீதிமன்ற நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சட்டமா அதிபரால், ஜனாதிபதி செயலாளருக்கு அறிக்கைமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இவ்விவகாரம் குறித்து சபாநாயகருக்கு, ஜனாதிபதி செயலாளரால் கடிதமொன்று அனுப்பட்டுள்ளது.

ஜனாதிபதியால் விடுக்கப்படும் அறிவிப்புகள், சபையில் சமர்ப்பிக்கப்படுவதே வழமையான நடவடிக்கையாகும். எனினும், குறித்த கடிதம் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.

எனவே, குறித்த கடிதத்தை சபையில் முன்வைத்து, தனது நிலைப்பாட்டை – தீர்மானத்தை சபாநாயகர் அறிவிப்பாரானால், தெரிவுக்குழுவில் நாளை வேண்டுமானாலும் நான் ஆஜராகி சாட்சியமளிப்பதற்குத் தயார்.

நீதிமன்ற விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடக்கூடாது. அந்த நடைமுறையையே நான் பின்பற்றியுள்ளேன்.

எனினும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணையானது, நீதிமன்ற நடவடிக்கையில் எவ்வித தாக்கத்தையும் செலுத்தாது என சபாநாயகர் அறிவித்தால், தெரிவுக்குழுவில் முன்னிலையாகி முக்கிய பல விடயங்களை தெரியப்படுத்துவதற்கு தயார் நிலையிலேயே இருக்கின்றேன்" - என்றார்.

அதேவேளை, "தெரிவுக்குழு குறித்து ஜனாதிபதியின் செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான தேவை எழவில்லை" என்று கடந்த ஜுன் 8ஆம் திகதி விசேட அறிக்கையொன்றை விடுத்து சபாநாயகர் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

charles ariyakumar jaseeharan

No comments:

Post a Comment