தனது தாய் மொழிக்கு மரியாதையளிப்பதைப் போன்றே ஏனைய மொழிகளையும் அறிந்து கொள்ள வேண்டும் - ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Monday, July 1, 2019

தனது தாய் மொழிக்கு மரியாதையளிப்பதைப் போன்றே ஏனைய மொழிகளையும் அறிந்து கொள்ள வேண்டும் - ஜனாதிபதி

நாட்டில் இனங்களுக்கிடையே நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுவதற்கு மொழியறிவு முக்கியமானதாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (01) முற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற அரசகரும மொழிகள் தின விழாவில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அரசகரும மொழி கொள்கையை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசகரும மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தும் வாரம் இன்று முதல் ஜூலை 05ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது.

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நல்லிணக்கத்தை நனவாக்குவதற்கு மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறை ரீதியில் அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
அரசகரும மொழி கொள்கை தொடர்பில் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரிகள் இதுவரையிலும் போதிய கவனம் செலுத்தாதமையினால் ஏற்பட்டுள்ள நிலைமையை இதன்போது தெளிவுபடுத்திய ஜனாதிபதி, தனது தாய் மொழிக்கு மரியாதையளிப்பதைப் போன்றே ஏனைய மொழிகளையும் அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும் என தெரிவித்தார்.

நாட்டு மக்களிடையே அச்சமும் பயமும் அவநம்பிக்கையும் தோன்றியுள்ளமைக்கு அவர்களுக்கிடையே சரியான புரிந்துணர்வு இல்லாமையே காரணமாகும் எனவும் அனைத்து மக்களும் சமாதானமாகவும் சந்தோசமாகவும் வாழ்வதற்கான சுதந்திரமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே மொழியறிவை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பினால் பங்களிப்பு வழங்கப்படும் மொழிக் கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பித்தல் மற்றும் மும்மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட படிவங்களை இணையத்தளத்தில் வெளியிடும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சின் செயலாளர் ஏ.எஸ்.எம்.எஸ். மஹாநாம, கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் ஆகியோரும் கொழும்பு பல்கலைக்கழக சிங்கள மொழி கற்கைகள் பிரிவின் தலைவர் பேராசிரியர் சந்தகோமி கோபறஹேவா, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் என்.செல்வக்குமாரன் உள்ளிட்ட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விமான்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment