பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (16) மாலை 4 மணி முதல் மத்திய தபால் பரிமாற்றகத்தின் சேவையிலிருந்து விலகியிருக்கும் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளை மறுதினம் மாலை 4 மணிவரை இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக, ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை அடுத்து, அரசினால் கடந்த செப்டெம்பர் மாதம் அமைச்சரவைக்கு சில பரிந்துரைகளை முன்வைக்கப்பட்டது.
எனினும், அது குறித்து அமைச்சரவை இதற்கான அனுமதியை இதுவரை வழங்கவில்லை என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று தமது கோரிக்கைகளுக்கான தீர்வைப் பெற்றுத்தருமாறும் தொழிற்சங்கம் கோரியுள்ளது.
அரசாங்கம் தமது அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் செவிசாய்க்காவிடின், பிறிதொரு நாளில் அனைத்து ஊழியர்களையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கும் தயாராகவுள்ளதாக
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த தொழிற்சங்கங்கள் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மத்திய தபால் பரிமாற்றகத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment