ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்புக்கூற வேண்டும் - சுமந்திரன் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Thursday, May 2, 2019

ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்புக்கூற வேண்டும் - சுமந்திரன் எம்.பி.

"உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அறிந்திருக்கின்றார். எனினும் இந்த விடயம் குறித்து எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் அவர் வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். வெளிநாட்டிலே இருக்கின்றபோதும் அவருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்திருக்கின்றன. எதையும் பொருட்படுத்தாது ஜனாதிபதி செயற்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்."

இவ்வாறு பகிரங்கமாகத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். இந்தச் சந்திப்பின்போதே மேற்படி கருத்தை அவர் முன்வைத்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், "பாதுகாப்பு முன்னறிவித்தல்கள், முன்னெச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றபோதும், அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமையால் இந்தக் கோரச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. முன்னாள் பாதுகாப்புச் செயலரும், தற்போது கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபரும் தாங்கள் இந்த முன்னெச்சரிக்கையை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றார்கள் என்ற நிலைப்பாட்டைப் பகிரங்கமாக அறிவிப்பார்கள் என நான் நம்புகின்றேன்.

தனக்குத் தெரிந்திருந்தும் அது பற்றி நடவடிக்கைகள் எடுக்காமல் ஜனாதிபதி வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். வெளிநாட்டிலே இருக்கின்றபோதும் அவருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்திருக்கின்றன. எதையும் பொருட்படுத்தாது ஜனாதிபதி செயற்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடயம். 

சட்டவிரோதமாக பொலிஸ் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழே ஜனாதிபதி வைத்திருப்பதால் தாக்குதல் சம்பவத்துக்கு முதலாவது பொறுப்பாளியாகின்றார். இந்தச் சம்பவங்களுக்கு பொறுப்புக் கூறுவதானது மிகவும் முக்கியமானது. ஆனால், உத்தியோகத்தர்கள் மத்தியிலே அந்தப் பொறுப்புக் கூறல் நின்றுவிட முடியாது. 

ஜனாதிபதியும் பிரதமரும் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். பிரதமர் தனக்கு எதுவும் கூறப்படவில்லை என்று சொன்னாலும், தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு தான் அழைக்கப்படவில்லை என்பதை அவர் ஏற்கனவே சொல்லியிருக்க வேண்டும். அதைச் சொல்லாமல் ஆறு மாத காலம் இருந்துவிட்டு அதற்குப் பின்னர் "எனக்கு எதுவும் தெரியாது" என்று கூறுவது பொறுப்பான ஒரு செயற்பாடாக நாங்கள் கருத முடியாது. 

ஆகவே, எங்களைக் பொறுத்தவரையிலே இவை தவிர்த்திருக்க கூடிய சம்பவங்கள். தவிர்த்திருக்கக் கூடியவை என்பது மட்டுமல்ல இதன் பின்னணியிலே பாதுகாப்புத் தரப்பு, விசேடமாக இராணுப் புலனாய்வுப் பிரிவிலே இருந்து சிலர் ஈடுபட்டிருப்பதும், தேசிய தௌஹீத் ஜமாஅத்துக்கு அவர்கள் மாதாமாதம் சம்பளம் கொடுத்திருப்பதும், வவுணதீவிலே பொலிஸாரைக் கொல்வதற்கும், அதேபோல் வேறு சில தாக்குதல்களை மேற்கொள்வதற்கும் அவர்கள் உபயோகிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளன. இந்த விடயங்கள் முழுமையாக வெளிவர வேண்டும். 

முன்னாள் பாதுகாப்புத் தரப்பு மட்டுமல்ல சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதனை வளர வைப்பதற்கு பலவிதமான உதவிகளைச் செய்துள்ளார்கள் என்பது புலனாகின்றது. வெவ்வேறு மட்டங்களிலே அந்த உதவிகள் செய்யப்பட்டிருக்கின்றன. பல காலமாகச் செய்யப்பட்டிருக்கின்றன. ஆகவே, இவை எல்லாவற்றுக்கும் இவர்கள் அனைவர்களும் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டவவர்கள். 

இந்தச் சம்பவங்கள் அனைத்துக்கும் எங்களுடைய வருத்தத்தை நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம். அரசிலே நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும்கூட ஏதோவொரு விதத்திலே அரசில் எதிர்க்கட்சியும் ஓர் அங்கம். அப்படியான ஓர் இடத்திலே நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலே இருந்து அரசு தவறியது என்கின்ற பொறுப்பை நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம். அதற்காக எமது ஆழ்ந்த கவலையையும், வருத்தத்தையும் நாங்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்" - என்றார்.

charles ariyakumar jaseeharan

No comments:

Post a Comment